யானைக்கவுனி ரெயில்வே மேம்பாலத்தின் 2-வது பகுதி - ஜூனில் பயன்பாட்டுக்கு வருகிறதா?
- மேம்பாலத்தின் மற்றொரு பகுதியில் தொடர்ந்து பணிகள் நடைபெற்று வந்தன.
- சவுகார்பேட்டை மற்றும் ஜார்ஜ் டவுனில் இருந்து பாரிமுனை பகுதிக்கு செல்லும் வாகன நெரிசல் குறையும்.
ராயபுரம்:
சென்னை யானைக் கவுனி மேம்பாலம் 1935-ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழைய மேம்பாலம் ஆகும். பாலம் பழுதடைந்ததால் கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்து கடந்த 2016-ம் ஆண்டு யானைகவுனி மேம்பாலம் மூடப்பட்டது.
ரெயில்வே பாதை வழியாக பாலம் அமைவதால் ரெயில்வே துறையுடன் மாநகராட்சி இணைந்து மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி யானைகவுனி ரெயில்வே மேம்பாலம் கட்ட ரெயில்வே துறை ரூ. 49 கோடி மற்றும் மாநகராட்சி ரூ.30.78 கோடி என மொத்தம் ரூ.79.78 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
கடந்த 2019-ம் ஆண்டு பழைய பாலம் இடிக்கப்பட்டு புதிதாக அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் இந்த பணி முடிவடைவதில் காலதாமதம் ஏற்பட்டது. தூண்கள் அமைக்கப்படாமல் ராட்சத இருப்பு கம்பிகள் மூலம் இந்த பாலம் அமைக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியில் மேம்பாலப்பணிகள் முடிந்ததை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் திறக்கப்பட்டது. அதில் இருசக்கர வாகனம், ஆட்டோ, கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்ட்டது.
மேம்பாலத்தின் மற்றொரு பகுதியில் தொடர்ந்து பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் இந்த பணிகள் முழுவதும் தற்போது முடியும் நிலையில் உள்ளது. இதன் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகின்றன. எனவே யானைகவுனி ரெயில்வே மேம்பாலத்தின் 2-வது பகுதி அடுத்த மாதத்தில் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்த மேம்பாலம் முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது. சவுகார்பேட்டை மற்றும் ஜார்ஜ் டவுனில் இருந்து பாரிமுனை பகுதிக்கு செல்லும் வாகன நெரிசல் குறையும்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, யானைகவுனி ரெயிவே மேம்பாலத்தில் இறுதி கட்ட பணியை ரெயில்வே துறை மேற்கொண்டு வருகிறது.இந்த மாத இறுதிக்குள் பாலத்தை ஒப்படைக்க ரெயில்வே அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து உள்ளோம், அடுத்த மாதத்திற்குள் (ஜூன்) பாலம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.
யானைக் கவுனி மேம்பாலம் முழுவதும் பயன்பாட்டுக்கு வரும்போது வால்டாக்ஸ்சாலை, ஜார்ஜ் டவுன் பகுதியில் போக்கு
வரத்து நெரிசல் மிகவும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.