போலீசாருக்கு மன அழுத்தத்தை குறைக்க வாரந்தோறும் யோகா பயிற்சி
- சூலூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் போலீசாருக்கு யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
- யோகா மாஸ்டர் சூலூர் ஆனந்த் பல்வேறு ஆசன பயிற்சிகளை செய்து காட்டினார்.
சூலூர்,
கோவையில் போலீசாருக்கு கடும் பணிச்சுமை உள்ளது. இதனால் அவர்களுக்கு சோர்வு, மனஅழுத்தம் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்படுகிறது. எனவே கோவை மாவட்டத்தில் போலீசாருக்கு வாரம் ஒரு நாளில் யோகா பயிற்சி வழங்குவது என்று போலீஸ் எஸ்.பி. பத்ரி நாராயணன் முடிவு செய்தார்.
இதன் ஒரு பகுதியாக சூலூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் போலீசாருக்கு யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதில் 40-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர். அப்போது யோகா மாஸ்டர் சூலூர் ஆனந்த் பல்வேறு ஆசன பயிற்சிகளை செய்து காட்டினார். இதனை போலீசார் ஆர்வத்துடன் கற்று தேர்ந்தனர்.
இதுகுறித்து சூலூர் போலீசார் கூறுகையில், கோவை மாவட்டத்தில் பல்வேறு போராட்டங்கள் மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.
இந்த நிலையில் எங்களுக்கு இந்த யோகா பயிற்சி மனதுடன் உடலையும் வலுப்படுத்தும் வகையில் அமைந்து உள்ளது என்று தெரிவித்தனர். கோவை மாவட்டத்தில் போலீசார் மத்தியில் யோகா பயிற்சிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் யோகா பயிற்சி அளிப்பது என்று அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.