தாமரை அரசமைக்கும் காலத்தை பார்ப்பீர்கள்- சேகர்பாபுவுக்கு தமிழிசை பதிலடி
- ஏரியில் கூட தாமரை வளரக்கூடாது என அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்தார்.
- வருங்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் தாமரை மலரப் போகிறது அதைக் கண்டு அலறப்போகிறீர்கள்.
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் போரூரில் 16.60 ஏக்கர் பரப்பளவில் ரூ.12.60 கோடி மதிப்பில் ஈரநிலை பசுமை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்காவின் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு நேற்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது பூங்கா ஏரியில் தாமரை வளர்ந்திருப்பதை அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டிய அமைச்சர் சேகர்பாபு, ஏரியில் கூட தாமரை வளரக்கூடாது என்று கிண்டலாக பேசினார்.
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று பாஜகவினர் பல ஆண்டுகளாக கூறிவரும் நிலையில், அதனை கிண்டலடிக்கும் விதமாக சேகர்பாபு பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் குளத்தில் தாமரை மலர்வதைக் கண்டே அலறுகிறீர்களே வருங்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் தாமரை மலரப் போகிறது என பாஜக-வின் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.
அதில், குளத்தில் தாமரை மலர்வதைக் கண்டே அலறுகிறீர்களே வருங்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் தாமரை மலரப் போகிறது அதைக் கண்டு அலறப்போகிறீர்கள். அரசு பூங்காவில் தாமரை வேண்டாம் என கூறும் நீங்கள் தாமரை அரசமைக்கும் காலத்தை பார்ப்பீர்கள் என கூறியுள்ளார்.