இளம்பெண் மர்மசாவு: கணவனை கைது செய்ய கோரி உடலை வாங்க மறுத்த உறவினர்கள் போராட்டம்
- பிரியங்கா வீட்டில் உடலில் காயங்க ளுடன் பிணமாக கிடந்தார்.
- மருத்துவமனை வளாகத்தில் காவல் துறையினரை முற்றுகையிட்டு உறவினர்கள் நேற்று மாலை வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், மெணசி அடுத்த மருக்காலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். கூலி தொழிலாளி.இவருக்கு ராஜாத்தி என்ற மனைவியும் பிரியங்கா என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் பிரியங்காவிற்கும் தருமபுரி அடுத்த ஜருகு ஏரிக்கரை பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இவர்கள் இருவருக்கும் 2-வது திருமணம் என்பதால் இருவருக்கும் வரதட்சணை சம்மந்தமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் இவர்களுக்கு 4 வயது மற்றும் 2 வயதில் இரண்டு ஆண்கள் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் பிரியங்காவின் கணவன் சுந்தரமூர்த்தி பிரியங்காவின் பெற்றோர்களுக்கு அடிக்கடி போன் செய்து பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார்.
இதனால் பிரியங்காவின் பெற்றோர்கள் சுமார் 15 லட்சம் வரை கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதே போல் மீண்டும் தொடர்ந்து பிரியங்காவிடம் உன்னுடைய பெற்றோரிடம் பணம் வாங்கி வா என அடித்து துன்புறுத்தி உள்ளார்.
இந்நிலையில் பிரியங்கா வீட்டில் உடலில் காயங்க ளுடன் பிணமாக கிடந்தார்.
இது குறித்து தொப்பூர் காவல் துறையினர் பிரேதத்தை கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் தனது மகளை சுந்தரமூர்த்தி அடித்து கொலை செய்து விட்டதாகவும், அவரது இறப்பிற்கு காரணமான சுந்தரமூர்த்தியை கைது செய்ய வேண்டும் என மருத்துவமனை வளாகத்தில் காவல் துறையினரை முற்றுகையிட்டு உறவினர்கள் நேற்று மாலை வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் சமரசபேச்சு வார்த்தையில் ஈடுபட்டு விரைவில் சுந்தரமூர்த்தியை கைது செய்து வருவாய் கோட்டா ட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார். இதையடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.