அரசு என்ஜினீயரிங் கல்லூரி உதவி பேராசிரியையிடம் நகை பறித்த வாலிபர் கைது
- பல்கலைக்கழகத்துக்கு எதிராக உள்ள கோட்ட கவுண்டம்பட்டியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருகிறார்.
- 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து உதவி பேராசிரியை சுகன்யா அணிந்து இருந்த 2 பவுன் நகையை பறித்து சென்றனர்.
சேலம்:
சேலம் அரசு என்ஜினீயரிங் கல்லூரி உதவி பேராசிரியையாக சுகன்யா (35) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பல்கலைக்கழகத்துக்கு எதிராக உள்ள கோட்ட கவுண்டம்பட்டியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு 8 மணியளவில் இவர் பணி முடிந்து தனது மொபட்டில் பல்கலைக்கழகம் பகுதியில் உள்ள பாலத்தின் கீழே சென்று கொண்டு இருந்தார். அங்கு இருந்த 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து உதவி பேராசிரியை சுகன்யா அணிந்து இருந்த 2 பவுன் நகையை பறித்து சென்றார்.
இதுகுறித்து தெரியவந்ததும் கருப்பூர் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அப்போது உதவி பேராசிரியை சுகன்யாவிடம் நகையை பறித்து சென்றது ஓமலூர் மாட்டு காரன்புதூர் பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் உள்பட 2 பேர் என்று தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான வாலிபர் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.