ஒரே வருடத்தில் கசந்த காதல்- கணவன் கைவிட்டதால் இளம்பெண் போலீசில் புகார்
- இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு செல்வதாக கூறி விட்டு ராஜேஷ்குமார் பிலாத்து கிராமத்துக்கு வந்தார்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள ஊராளிப்பட்டியைச் சேர்ந்தவர் மகாலெட்சுமி (வயது 28). இவர் டிப்ளமோ நர்சிங் முடித்து விட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார்.
வடமதுரை அருகே உள்ள பிலாத்து கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (33). இவர் சென்னை பெருங்குடியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அப்போது இவர்கள் 2 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் யாருக்கும் தெரியாமல் சென்னையிலேயே திருமணம் செய்து கொண்டு அங்கேயே வாழ்ந்து வந்தனர்.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு செல்வதாக கூறி விட்டு ராஜேஷ்குமார் பிலாத்து கிராமத்துக்கு வந்தார். அதன் பிறகு தனது மனைவியிடம் பேசுவதை நிறுத்திக்கொண்டார். பலமுறை தொடர்பு கொண்டும் அவர் பேசவில்லை.
இதனால் சந்தேகமடைந்த மகாலெட்சுமி வேறொரு செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது தனக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடக்க இருப்பதால் இனிமேல் நாம் சேர்ந்து வாழ முடியாது. எனவே தன்னை மறந்து விடவும் என கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மகாலெட்சுமி வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் மாற்று சமூகம் என தெரிந்தும் தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், தான் கர்ப்பிணியானபோது சில வருடங்கள் கழித்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என கூறி கருவை கலைத்து விட்டதாகவும் கூறினார்.
தற்போது பெற்றோரின் பேச்சை கேட்டுக்கொண்டு வேறு பெண்ணை திருமணம் செய்ய முயல்வதால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.