போலி நகையை அடகு வைத்து ரூ.2 லட்சம் மோசடி- வாலிபர் கைது
- நரேஷ் கடைக்கு வந்து நகையை பரிசோதனை செய்தபோது அது போலி நகை என்பது தெரிந்தது.
- மணிகண்டன் புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள மற்றொரு அடகு கடையில் போலி நகையை அடகு வைத்து பணத்தை பெற்று உள்ளார்.
ராயபுரம்:
புதுவண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை பகுதியில் அடகு கடை நடத்தி வருபவர் நரேஷ். கடந்த 24-ந்தேதி நரேஷ் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு சென்று இருந்தார்.
அப்போது கடையில் அவரது வயதான தந்தை சஜ்ஜன் இருந்தார். அந்த நேரத்தில் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அடகு கடைக்கு வந்து நகையை அடகு வைத்தார். தனது தாயின் மருத்துவ செலவுக்கு என்று கூறி ரூ.92 ஆயிரத்தை வாங்கிச்சென்றார். பின்னர் நரேஷ் கடைக்கு வந்து நகையை பரிசோதனை செய்தபோது அது போலி நகை என்பது தெரிந்தது.
இதேபோல் மணிகண்டன் புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள மற்றொரு அடகு கடையில் போலி நகையை அடகு வைத்து பணத்தை பெற்று உள்ளார். அவர் போலி நகை மூலம் சுமார் ரூ.2 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த மற்றொரு நண்பரை போலீசார் தேடி வருகிறார்கள்.