கருங்குளம் வட்டாரத்தில் 50சதவீத மானியத்தில் பூங்கார் ரக நெல் விதை -வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்
- பூங்கார் ரக நெல் விதை 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
- வயலில் 10 நாட்களுக்கு மேலாக தண்ணீர் இருப்பினும் விதை பாதிப்படைவதில்லை
செய்துங்கநல்லூர்:
கருங்குளம் வட்டாரத்தில் 50 சதவீத மானியத்தில் பூங்கா ரக நெல் விதை வழங்கப்படுவதாக வேளாண்மை உதவி இயக்குனர் இசக்கியப்பன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
கருங்குளம் வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் 2022-23 -ம் ஆண்டு நெல் ஜெயராமனின் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்திட்டத்தின் கீழ் பூங்கார் ரக நெல் விதை 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
பூங்கார் நெல் பாரம்பரிய நெல் ரகங்களில் ஒன்று. இது நெல் வகைகளில் குறுகிய கால பயிராகும். பாரம்பரிய நெல் வகைகளில் மாறுபட்ட ரகமான இந்த பூங்கார் நெல் 40 நாட்களுக்கு விதை உறக்கத்திலிருந்து அதற்கு பிறகு முளைக்கக் கூடிய திறன் கொண்டதாகும். சிவந்து காணப்படும் நெல் பயிர் அரிசியும் சிவப்பாகவே இருக்கும். இதன் வயது 70 நாட்கள் என்றாலும் பருவத்திற்கு ஏற்ப பயிர் செய்யும்போது 70 லிருந்து 90 நாட்களில் அறுவடைக்கு தயாராகிறது.
விதைப்பு செய்த நாற்றங்கால் வயலில் 10 நாட்களுக்கு மேலாக தண்ணீர் வடிய வழியில்லாமல் இருப்பினும் முளைக்கும் திறனும், முளைத்த விதையும் பாதிப்படைவதில்லை. இதன் நெல் கதிர் மூப்படைந்த அறுவடை நேரத்தில் தொடர் மழையாலும் மழை நீர் சூழ்ந்திருக்கும் காலத்தில் நெல் கதிர் தண்ணீருக்குள் இருந்தாலும் அது முளைக்காது.
இந்த பூங்கார் ரக நெல் விதை பெற்று இந்த திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் தங்கள் ஆதார் கார்டு நகல், குடும்ப அட்டை நகல், கணினி பட்டா மற்றும் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் தங்கள் பகுதி வேளாண்மை துறை அலுவலர்களை அணுகி பயன் பெறலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.