உண்மை எது

உண்மை எது - தவறாக பகிரப்பட்ட ஜவான் திரைப்படம் தொடர்பான வீடியோ

Published On 2023-09-03 14:11 GMT   |   Update On 2023-09-03 14:11 GMT
  • கிங் கான் என அழைக்கப்படும் ஷாருக்கிற்கு நாடு முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்
  • டிசம்பர் 22, 2011 அன்று டான்-2 பட விளம்பரத்திற்காக பாட்னா வந்திருந்தார்

இந்தி திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் ஷாருக் கான்.

ஷாருக் கதாநாயகனாக நடித்து, தமிழ் திரைப்பட இயக்குனர் அட்லீ இயக்கி இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும் இந்தி திரைப்படம், ஜவான். இப்படத்தை இந்தியாவிலும் உலகெங்கிலும் இந்தி ரசிகர்கள் மட்டுமின்றி தெலுங்கு, தமிழ் உட்பட பல மொழி திரைப்பட ரசிகர்களும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி சம்பந்தமான ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் பெருமளவில் மக்கள் திரளாக கூடி பாலிவுட் திரையுலகில் "கிங் கான்" என அழைக்கப்படும் ஷாருக்கை காண உற்சாகமாக கூடியிருக்கிறார்கள்.

ஆனால், ஆய்வில் இது தவறு என தெரிகிறது.

உண்மை என்னவென்றால், ஷாருக் கான் நடித்த டான்-2 எனும் திரைப்படம் டிசம்பர் 23, 2011 அன்று திரையரங்குகளில் வெளியானது.

அதற்கு முந்தைய நாள், டிசம்பர் 22, 2011 அன்று, அத்திரைப்படத்திற்கான விளம்பர நிகழ்ச்சிக்காக பீகார் தலைநகர் பாட்னாவிற்கு ஷாருக் வந்திருந்தார். அப்போது அவர் பாட்னாவின் முக்கிய குறியீட்டு இடங்களில் ஒன்றான பிஸ்கோமான் பவன் (Biscomaun Bhawan) அருகே உள்ள மவுர்யா ஓட்டலில் தங்கியிருந்தார்.

அவரை காண பெருமளவில் ரசிகர்கள் திரண்டிருந்தனர். தனது ரசிகர்களை ஓட்டல் பால்கனியிலிருந்து கண்ட ஷாருக் அவர்களை நோக்கி உற்சாகமாக கையசைத்தார். அவர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தனர்.

இப்போது வைரலாகியிருக்கும் வீடியோ காட்சியில் மக்கள் வெள்ளத்திற்கு பின்னால் பிஸ்கோமான் பவன் தெரிகிறது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோதான் இப்போது தவறுதலாக ஜவான் பட நிகழ்ச்சி எனும் பெயரில் வைரலாகி உள்ளது என தெரியவந்துள்ளது. இதற்கும், ஜவான் பட இசை வெளியீட்டு விழாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை.

இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

Tags:    

Similar News