உண்மை எது: இந்தியாவில் நடைபெற்றதாக கூறப்படும் கார் விபத்து
- இந்தியாவின் போக்குவரத்து விதிமீறல்கள் பலரால் விமர்சிக்கப்பட்ட ஒன்று
- 2022ல் வெளியான இத்திரைப்படத்தில் நடிகர் தனுஷ் முக்கிய வேடத்தில் நடித்தார்
கடந்த மாதம் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் ஒரு கருப்பு நிற கார் வேகமாக ஒரு சாலையின் ஓரம் நிறுத்தப்பட்டிருக்கும் இரண்டு கார்களின் மேல் மோதுகிறது. அதில் அந்த இரு கார்களும் முற்றிலும் சேதமடைந்து கவிழ்கின்றன. அருகே உள்ள மக்கள் இதனை கண்டு அலறியடித்து கொண்டு ஓடுகின்றனர்.
ஒரு சிலர், கார்களிலிருந்து சிதறி காற்றில் பறக்கும் கண்ணாடி துண்டுகள் மற்றும் உலோகங்கள் தங்களை தாக்குவதில் இருந்து தப்பிக்க கீழே குனிந்து கொள்கின்றனர். இந்த வீடியோவுடன், "இது எந்த கார்? நல்ல வேளையாக உள்ளே யாரும் இல்லை. இந்தியா" என ஒரு குறுஞ்செய்தியும் பதிவிடப்பட்டிருந்தது.
இந்தியாவின் போக்குவரத்து விதி மீறல்களும், சாலைகளின் தரமும், இந்தியர்கள் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதும் பல முறை பலரால் உலகளவில் விமர்சிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த வீடியோ அத்தகைய கருத்துக்களுக்கு வலுவூட்டுவதாக சமூகவலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது.
ஆனால், ஆய்வில் இந்த வீடியோவில் உள்ள காட்சிகள் உண்மையில்லை என்பதும், அந்த சம்பவம் நடைபெறுவது இந்தியாவிலேயே இல்லை என்பதும் நிரூபணமாகியுள்ளது.
தேடுதலில் இந்த வீடியோவின் முழுப்பகுதி கிடைத்தது. அதில் "ப்ரேக் நகரில் படப்பிடிப்பு" என குறிப்பிடப்பட்டுள்ளது. சாலையில் நிற்கும் இரு கார்களும், மக்கள் நடப்பதும், அதற்கு பிறகு கருப்பு கார் வந்து நின்று கொண்டிருக்கும் கார்களின் மேல் மோதுவதும், மக்கள் ஓடுவதும் மட்டுமல்லாமல் அதனுடன் சினிமா படப்பிடிப்பு கேமரா மற்றும் படப்பிடிப்பு உபகரணங்கள் ஆகியவை உள்ளதும் தெரிந்தது.
மேலும் ஆய்வில், இவை 2022-ல் வெளியான "தி க்ரே மேன்" எனும் ஆங்கில திரைப்படத்தின் படப்பிடிப்பின் காட்சிகள் என்பதும் அந்த படப்பிடிப்பு செக் குடியரசின்தலைநகரான ப்ரேக் நகரில் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட காட்சிகள் என்பதும் இந்த வீடியோ 2021 ஆண்டிலேயே வீடியோவாக வெளிவந்தது என்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த ஆங்கில திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.