உண்மை எது: சீன கர்ப்பிணி ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பிரசவித்தாரா?
- 9 குழந்தைகள் அந்த பெண்மணிக்கு ஒரே பிரசவத்தில் பிறந்தவை என பதிவாகியிருந்தது
- 2018 வருடம் முதல் 2 வருடங்களாக வயிற்று பகுதி வீங்கி கொண்டே வந்தது
சில நாட்களுக்கு முன் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலானது.
அதில் வழக்கத்திற்கு மாறாக மிக பெரும் வயிற்றுடன் உள்ள ஒரு பெண் காணப்பட்டார். அவர் கர்ப்பிணி என்றும் அவர் 9 குழந்தைகளை சுமக்கிறார் என்றும் அந்த வீடியோவுடன் ஒரு குறுஞ்செய்தி பதிவாகியிருந்தது. அதே வீடியோவில் சிறிது நேரம் கழித்து வரும் காட்சியில் 9 பிறந்த குழந்தைகள் காணப்பட்டனர். அக்குழந்தைகள் அந்த பெண்மணிக்கு ஒரே பிரசவத்தில் பிறந்தவை என கூறி, தாய்மையை போற்றிய ஒரு குறுஞ்செய்தியும் பதிவாகியிருந்தது.
ஆனால், ஆய்வில் இது உண்மையல்ல என தெரிய வந்துள்ளது.
சீனாவின் அன்ஷுன் (Anshun) பிராந்தியத்தில் உள்ள ஸாங்கி (Songqi) டவுனிற்கு அருகே உள்ளது டாசி (Dazhi) கிராமம். இங்கு வசித்து வந்தவர் ஹுவாங் குவோக்சியன் (Huang Guoxian). இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவருக்கு 2018 வருடம் முதல் 2 வருடங்களாக வயிற்று பகுதி வீங்கி கொண்டே வந்தது. தீவிர மருத்துவ பரிசோதனையில் இவருக்கு சினைப்பை புற்றுநோய் மற்றும் கல்லீரல் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது வயிற்றில் இருந்த நோய் கட்டிகள் அகற்றப்பட்டு, தேங்கிய திரவங்கள் வெளியேற்றப்பட்டன.
2020ல் இவரது நோய்க்கான சிகிச்சைக்கு மக்களிடம் பண உதவி கேட்டு இவர் சார்பில் வெளியிடப்பட்ட வீடியோவை பிறந்து சில மணி நேரங்களே ஆன குழந்தைகள் உள்ள வேறு ஒரு வீடியோவுடன் இணைத்து தவறாக பரப்பியுள்ளனர்.
இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.