கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பா? பரவும் போலி தகவல்
- தமிழக கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் Animal Handler and Animal Handler cum Driver பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக தகவல் பரவி வருகிறது.
- இம்மாதிரியான இணையதளங்களில் கால்நடை பராமரிப்புத்துறை குறித்து வரும் போலியான அறிவிப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம்:
இணையதளங்களில் தமிழக கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு என போலி தகவல் பரப்பும் நபர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் Animal Handler and Animal Handler cum Driver பணியிடங்களுக்கு சம்பளம் முறையே ரூ.15,000/- மற்றும் ரூ.18,000/- எனவும் தகுதி மற்றும் வயது ஆகியவை நிர்ணயிக்கப்பட்டு 90 மணி நேரம் பயிற்சி அளித்து பணி நியமன ஆணை வழங்கப்படும் எனவும் அதற்கான ஆணை ஜூன் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் எனவும் புலனம் (Whatsapp) செயலி மற்றும் முகநூல் மூலம் பரப்பப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானவை.
இம்மாதிரியான இணையதளங்களில் கால்நடை பராமரிப்புத்துறை குறித்து வரும் போலியான அறிவிப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் போலியான தகவல்களை பரப்பும் நபர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்