கதம்பம்

'அத்தான் என்னத்தான்..!'

Published On 2024-06-26 09:30 GMT   |   Update On 2024-06-26 09:30 GMT
  • ஒருமுறை கவியரசர் கண்ணதாசனின் கையில் அகப்பட்டது.
  • எம்.எஸ்.வி.யால் பலகாலம் கவியரசரின் மனதுக்குள் ஓய்வாக ஒருபக்கம் படுத்து உறங்கிக் கொண்டிருந்தது.

இராமச்சந்திரக் கவிராயர் என்று ஒருவர்.

பாவம். அந்த பாவலர், விரக்தியின் விளிம்புக்கே சென்று வந்தவர் போலிருக்கிறது.

தனது வேதனையின் வெளிப்பாடாக இராமச்சந்திரக் கவிராயர் ஒரு பாடல் புனைந்தார். வேதாந்தம் கலந்த பாடல் அது.

'கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா?

இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான் கொடுத்துத்தான் இரட்சித்தானா?

அல்லைத்தான் சொல்லைத்தான் ஆரைத்தான் நோவத்தான்' என அந்தப்பாடலில் வேதனையை வெளிப்படுத்தியிருப்பார் கவிராயர்.

துன்பம் கொஞ்சம் தூக்கலாக உள்ள இராமச்சந்திரக் கவிராயரின் இந்த பாடல் அச்சிடப்பட்ட காகிதம் ஒன்று, ஒருமுறை கவியரசர் கண்ணதாசனின் கையில் அகப்பட்டது.

சோகம் எப்போதும் சுவையானது அல்லவா? கவியரசர் அந்த பாடலை வாசித்தபோது அந்தப் பாடல் அவருக்குள் ஏற்படுத்தியது சோகத்தை அல்ல, வேறொரு சுகமான உணர்வை!

'கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான்'என்ற வரிகள் கவியரசருக்குள் ஏனோ 'அத்தான், அத்தான்' என்று யாரோ அழைப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தின.

அதை அப்படியே திரைப்பாடலாக மாற்றி, 'அத்தான், என்னத்தான், அவர் என்னைத்தான்' என்று எழுதினார் கண்ணதாசன். ஆனால், அந்தப் பாடலை இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அப்போது ஏற்கவில்லை.

'என்னண்ணே, அத்தான் பொத்தான்னு எழுதிக்கிட்டு? வேற எதையாவது நல்லதா(!) எழுதுங்க' என்று அப்போது கேட் போட்டு விட்டார் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

பல்லக்கில் ஏறி பவனி வந்திருக்கவேண்டிய அந்தப்பாடல், பாவம், எம்.எஸ்.வி.யால் பலகாலம் கவியரசரின் மனதுக்குள் ஓய்வாக ஒருபக்கம் படுத்து உறங்கிக் கொண்டிருந்தது.

இந்தநிலையில், பாவமன்னிப்பு (1961) படத்துக்காக அந்தப் பாடலை கவியரசர் கண்ணதாசன் மீண்டும் அரங்கேற்ற முயல, அப்போதும் அதற்கு முட்டுக்கட்டை போட முயன்றிருக்கிறார் எம்.எஸ்.வி.

பாவம். இந்தமுறை எம்.எஸ்.வி.யின் பாச்சா பலிக்கவில்லை. பாவமன்னிப்பு திரைப்படத்தில் இடம்பெற்ற அந்த 'அத்தான், என்னத்தான்' என்ற பாடல், இன்றுவரை திரை ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் இடம்பிடித்து வீற்றிருக்கிறது.

-மோகன ரூபன்

Tags:    

Similar News