இந்தியா

எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி லாபம்: பெட்ரோல், டீசல் விலையை குறைப்பார்களா?

Published On 2023-07-27 04:32 GMT   |   Update On 2023-07-27 04:32 GMT
  • 30 சதவீதத்துக்கும் அதிகமாக கச்சா எண்ணையின் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது.
  • கடந்த சில நிதி ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட வருமானத்தையும் செலவினங்களையும் ஈடுசெய்ய உதவும்.

மும்பை:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆனாலும் இந்திய எண்ணை நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமலேயே உள்ளன. இந்நிலையில் எண்ணை நிறுவனங்களுக்கு இந்த நிதி ஆண்டில் வரிக்கு முந்தைய லாபம் மட்டுமே 3 மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக கிரிசில் என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சர்வதேச சந்தையில் கடந்த நிதி ஆண்டோடு (2022-23) ஒப்பிடுகையில், இந்த நிதி ஆண்டில் 30 சதவீதத்துக்கும் அதிகமாக கச்சா எண்ணையின் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது.

ஆனால் இந்திய எண்ணை நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையில் கடந்த ஆண்டு மே மாதத்துக்கு பிறகு எந்த மாற்றமும் செய்யாமல் அதே விலையில் தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றன.

இதனால் இந்நிதி ஆண்டில் எண்ணெய் நிறுவனங்களின் வரிக்கு முந்தைய லாபம் ரூ.1 லட்சம் கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2022-23ம் நிதி ஆண்டில் இது ரூ.33 ஆயிரம் கோடியாக இருந்தது. எனவே இந்த நிதி ஆண்டில் வரிக்கு முந்தைய லாபம் மட்டுமே 3 மடங்காக அதிகரித்துள்ளது.

கடந்த 2017 முதல் 2022-ம் ஆண்டு வரை எண்ணெய் நிறுவனங்களின் வரிக்கு முந்தைய லாபம் சராசரியாக ரூ.60 ஆயிரம் கோடியாக இருந்தது.

இந்த அதிக லாபம் எண்ணெய் நிறுவனங்களுக்கு கடந்த சில நிதி ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட வருமானத்தையும் செலவினங்களையும் ஈடுசெய்ய உதவும்.

எண்ணெய் நிறுவனங்கள் 2 வழிகளில் லாபம் ஈட்டுகின்றன. அவை எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் சில்லரை விற்பனை ஆகும். கச்சா எண்ணையின் விலை, அதை சுத்திகரிக்க ஆகும் செலவு ஆகியவற்றுடன் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களின் மொத்த விலையை கழித்தால் வரும் லாபம் எண்ணை நிறுவனங்களுடையது. மேலும் கச்சா எண்ணையை சுத்திகரித்த பின்பு கிடைக்கும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை விற்பனை செய்வதன் மூலமும் எண்ணெய் நிறுவனங்கள் லாபம் பெறுகின்றன.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பார்களா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Tags:    

Similar News