இந்தியா

வைஷ்ணவ தேவி கோவிலுக்கு புறப்பட்ட பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து - 10 பேர் பலி!

Published On 2023-05-30 04:26 GMT   |   Update On 2023-05-30 04:27 GMT
  • ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஜாகர் கோட்லி அருகில் விபத்தில் சிக்கியது.
  • விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் ஜம்முவின் அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர்.

ஜம்முவின் வைஷ்ணவ தேவி கோவிலுக்கு பக்தர்களுடன் சென்று கொண்டிருந்த பேருந்து பாலத்தில் இருந்து பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பக்தர்களில் பத்து பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 50 பேர் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அம்ரித்சரில் இருந்து கிளம்பிய பேருந்து, ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது ஜாகர் கோட்லி எனும் இடத்தில் விபத்தில் சிக்கியது. இங்கிருந்து வைஷ்ணவ தேவி கோவில் இருக்கும் காத்ரா 15 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. வைஷ்ணவ தேவி பக்தர்கள் கோவிலுக்கு செல்வதற்கான ஆரம்ப பகுதி ஆகும்.

விபத்து ஏற்பட்ட பகுதியில் மத்திய ரிசர்வ் காவல் படை, காவல் துறை மற்றும் இதர மீட்பு படையினர் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதோடு விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வகையில், ஆம்புலன்ஸ் மற்றும் இதர வாகனங்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன.

"பத்து பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் பலத்த காயமுற்றனர். பேருந்து அம்ரித்சரில் இருந்து கிளம்பி காத்ராவுக்கு சென்று கொண்டிருந்த போது காஜர் கோட்லி அருகே பள்ளத்தாக்கில் விழுந்தது. விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் ஜம்முவின் அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர். 12 பேர் உள்ளூர் பொது சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்," என்று ஜம்முவின் துணை ஆணையர் அவ்னி லவசா தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News