இந்தியா
10 மாத குழந்தைக்கு மத்திய அரசு பணி - நெகிழ வைத்த இந்தியன் ரெயில்வே
- முதன்முறையாக 10 மாத குழந்தைக்கு இந்திய ரெயில்வேயில் பணி வழங்கப்பட்டுள்ளது.
- குழந்தை 18 வயதை பூர்த்தி செய்ததும் சுய விருப்பத்தின் அடிப்படையில் பணிக்கு சேரலாம்.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திரகுமார் விலாய் பகுதியில் ரெயில்வே ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த வாரம் வாகன விபத்தில் ராஜேந்திரகுமாரும், அவரது மனைவியும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக இவர்களது 10 மாத குழந்தை ராதிகா யாதவ் உயிர் பிழைத்தது.
இந்நிலையில், ரெயில்வே விதிகளின் படி ராஜேந்திரகுமாரின் குடும்பத்திற்கு ராய்ப்பூர் ரெயில்வே கோட்டம் அனைத்து உதவிகளையும் செய்தது. தற்போது பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வரும் 10 மாத குழந்தையான ராதிகா யாதவுக்கு தன் தந்தையின் பணி வழங்கப்பட்டு உள்ளது.
சிறிய குழந்தை என்பதால் அதன் கைரேகையைப் பதிவுசெய்து பணி நியமனம் உறுதிபடுத்தப்பட்டது. குழந்தை 18 வயதை பூர்த்தி செய்ததும், சுய விருப்பத்தின் அடிப்படையில் பணிக்கு சேரலாம் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.