இந்தியா

சதுரங்க வேட்டை பட பாணியில் ரூ.100 கோடி கழுதை வளர்ப்பு மோசடி

Published On 2024-11-17 08:02 GMT   |   Update On 2024-11-17 08:02 GMT
  • விண்ணப்பித்தவர்களுக்கு தனியாக இந்த கும்பல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்படுத்தினர்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி:

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஈமு கோழி வளர்ப்பு என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி அரங்கேறியது.

இதே போல ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் கழுதை வளர்ப்பு என்ற பெயரில் மக்களை ஏமாற்றி ரூ.100 கோடிக்கு மேல் கும்பல் என்று அசால்டாக கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது சந்தையில் கழுதை பாலுக்கு அதிக தேவை உள்ளது.

ஒரு லிட்டர் கழுதைப்பால் 1600 ரூபாயில் இருந்து 1800 ரூபாய்க்கு வாங்குவதாக விளம்பரம் செய்தனர். யூடியூப் சேனல் வீடியோக்களில் தனக்கு அதிக ஆர்டர்கள் வருகின்றன, ஆனால் தேவைக்கு ஏற்ப சப்ளை செய்ய முடியவில்லை.

கழுதை பால் வியாபாரம் செய்தால் பெரும் லாபம் கிடைக்கும். எங்களிடம் உயர் ரக கழுதைகள் உள்ளன.

இந்த கழுதைகளுக்கான பணத்தை நீங்கள் செலுத்தினால் மட்டும் போதும். நாங்கள் உங்களுக்கு கழுதை பராமரிப்பதற்கான கொட்டகை அமைக்க உதவி செய்கிறோம்.

மேலும் ஒரு லிட்டர் கழுதை பாலை நாங்களே ரூ. 1500 கொடுத்து வாங்கிக் கொள்வோம் கழுதைக்கு நோய் வாய்ப்பட்டால் மருத்துவ செலவையும் நாங்களே ஏற்போம் என தெரிவித்தனர்.

இதனை நம்பி ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மாநிலங்களை சேர்ந்தவர்கள் அந்த கும்பல் தெரிவித்த ஆன்லைன் முகவரியை தேடி விண்ணப்பித்தனர்.

இதில் விண்ணப்பித்தவர்களுக்கு தனியாக இந்த கும்பல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்படுத்தினர். அதில் கழுதை வளர்ப்பு முறைகள் மற்றும் எப்படியெல்லாம் பால் தேவைப்படுகிறது.

அவற்றை நாங்கள் எப்படி சேகரித்து வருகிறோம் என்பது பற்றி விளக்கமாக பல மணி நேரம் பேசி நம்ப வைத்தனர். இதனை நம்பி ஏராளமானோர் கழுதைகளை வாங்க ஆர்வம் காட்டினர். ஒரு கழுதை ரூ.20 ஆயிரம் முதல் 1.50 லட்சம் வரை விற்பனைக்கு உள்ளன என அறிவிப்பு செய்தனர்.

இதனை நம்பிய விவசாயிகள் பலர் கழுதைகளை வாங்க லட்சக்கணக்கில் பணம் அனுப்பினர்.

சதுரங்க வேட்டை சினிமா பாணியில் கழுதை கருத்தரங்குகள் நடத்தி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மாநிலங்களைச் சேர்ந்த பலரையும் சிக்க வைத்தனர்.

இது ஒரு புறம் இருக்க கழுதைப் பாலை வீட்டிலேயே சேமித்து வைக்க தங்களிடம் பிரத்யேகமான எந்திரம் உள்ளது.

இந்த எந்திரம் ரூ.75,000 முதல் விற்பனைக்கு உள்ளது எனவும் தெரிவித்தனர். அதற்கும் பலர் பணம் செலுத்தி முன்பதிவு செய்தனர்.

கழுதைகளுக்கு சிகிச்சை அளிக்க கால்நடை டாக்டரைக் காட்டி உறுப்பினர் கட்டணம் என்ற பெயரில் ஒவ்வொரு உறுப்பினரிடமும் ரூ.25 லட்சம் வசூலித்தனர்.

விவசாயிகளுக்கு கழுதை பராமரிப்புக்கான கொட்டகை அமைக்க ஒவ்வொருவருக்கும் ரூ. 15 லட்சம் முதல் ரூ.70 லட்சம் வரையிலான வங்கி காசோலைகளை கொடுத்தனர். அவற்றை எழுதி வங்கியில் போட்டபோது அவை பணம் இல்லாமல் திரும்பி வந்தன.

மேலும் கடந்த 18 மாதங்களாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் இருந்து பால் பணம், பராமரிப்பு செலவு கொட்டகை கட்டுதல், பணியாளர் சம்பளம், கால்நடை சிகிச்சை செலவுகள் வழங்கப்படவில்லை.

அப்போதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை பணம் கட்டியவர்கள் தெரிந்து கொண்டனர். தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 400-க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் இந்த கும்பல் ரூ. 100 கோடி வரை அசால்டாக கொள்ளையடித்துள்ளனர்.

இது ஒரு பெரிய மோசடி என்னை தெரிந்து கொண்ட விவசாயிகள் இது குறித்து தெலுங்கானா மாநிலத்தில் உள்ள போலீஸ்களில் புகார் அளித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தை சேர்ந்த 2 பேர் பெயரையும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அந்த பெயர்கள் உண்மையானதா? அவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News