குருவா கொள்ளை கும்பல் கேரளாவில் நடமாட்டம்
- வீடுகள் மற்றும் பக்தர்களிடம் தங்கள் கைவரிசையை காட்டுவார்கள்.
- குருவா கும்பலை சேர்ந்த ஒருவரை எர்ணாகுளத்தில் போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:
சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் ஏராளமான பக்தர்கள் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வந்து தரிசனம் செய்வார்கள்.
இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஒரு கும்பல் பக்தர்களிடம் மட்டுமின்றி கேரளாவின் பல பகுதிகளிலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளது. குருவா கும்பல் என போலீசாரால் அழைக்கப்படும் இந்த கும்பல், இந்த ஆண்டும் கேரளாவில் நடமாட தொடங்கி உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக ஆலப்புழா சரக போலீஸ் துணை சூப்பிரண்டு மதுபாபு கூறியதாவது:-
சபரிமலை மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசன் காலங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் குருவா கும்பல் தற்போது ஆலப்புழாவில் நடமாடி வருகிறது. இவர்களை போலீசார் பார்த்துள்ளனர். அந்த கும்பலின் நடவடிக்கை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்தக் கும்பல் அம்பலப்புழா, காயம்குளம் போன்ற ரெயில் நிலையங்களுக்கு அருகில் தங்கி சிறு குழுக்களாக பிரிந்து சென்று கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. இவர்கள் பகலில் உளவுப் பணிகளை செய்து சாத்தியமான இலக்குகளை கண்காணிப்பார்கள்.
பின்னர் வீடுகள் மற்றும் பக்தர்களிடம் தங்கள் கைவரிசையை காட்டுவார்கள். எனவே பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் குருவா கும்பலை சேர்ந்த ஒருவரை எர்ணாகுளத்தில் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் தமிழகத்தை சேர்ந்த சந்தோஷ் என தெரியவந்துள்ளது.