போர்க்களமான மணிப்பூர் வீதிகள்.. முதலமைச்சர் வீடு முற்றுகை - கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு
- முதல்வர் பைரன் சிங்கின் மருமகன், அமைச்சர்கள் இருவர் வீடுகள் சூறையாடப்பட்டன
- ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை [AFSPA] திரும்பப்பெற பரிசீலனை செய்ய மாநில அரசு வலியுறுத்தியது.
மணிப்பூரில் கடந்த வாரம் முதல் வன்முறை சம்பவங்கள் மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளன. ஜிர்பாம் மாவட்டத்தில் கிராமங்களில் உள்ள வீடுகள் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டன. 31 வயதான ஆசிரியை ஒருவர் கடந்த நவம்பர் 7 ஆம் தேதி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்.
தொடர்ந்து கடந்த திங்கள் கிழமை ஜிர்பாமில் மெய்த்தேய் இனத்தை சேர்ந்த எரித்துக் கொல்லப்பட்ட 2 முதியவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. மேலும் அன்றைய தினம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் மற்றும் 3 பெண்கள் என 6 பேர் மயமாகினர்.
அவர்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்திக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் 6 உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. இது மாயமானவர்களின் உடல்கள் என்று சந்தேகிக்கப்படும் நிலையில் இந்த செய்தி காட்டுத் தீயாக மணிப்பூர் முழுவதும் பரவியது. இதனால் கொதித்தெழுந்த மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இம்பால் பள்ளத்தாக்கில் 5 மாவட்டங்களில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.
நேற்றைய தினம் முதல்வர் பைரன் சிங்கின் மருமகன், அமைச்சர்கள் இருவர் மற்றும் 3 எம்எல்ஏக்கள் வீடுகள் சூறையாடப்பட்டன. சொத்துக்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. மேலும் பா.ஜ.க. எம்.எல்.ஏ சபம் கொஞ்சகேசு, சபம் நிஷிகந்தா, ஆர்.கே.லிமோ ஆகியோரின் வீடுகளும் சூறையாடப்பட்டன.
நிலைமையை கட்டுப்படுத்த 5 மாவட்டங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கண்ணீர் புகைகுண்டுகளை வீசி போலீஸ் போராட்டக்காரர்களை கலைக்க முயற்சிக்கிறது. இந்த சூழலில் முதல்-மந்திரி பைரன் சிங்கின் வீட்டை போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயற்சித்தது.
இதனால், பாதுகாப்பு படையினர் அந்த பகுதியில் குவிக்கப்பட்டனர். அவர்கள், ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் மாநிலத்தில் ஆறு காவல்நிலையத்தில் மீண்டும் அமல்படுத்தப்பட்ட ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை [AFSPA] திரும்பப்பெற பரிசீலனை செய்யுமாறு மத்திய அரசுக்கு, மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதற்கிடையே மணிப்பூரில் மீண்டும் ஏற்பட்டிருக்கும் பதற்றம் மற்றும் போராட்டம் மிகவும் கவலை அளிப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி மணிப்பூருக்கு சென்று அங்கு சட்ட ஒழுங்கு மற்றும் அமைதி ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.