இந்தியா

நாட்டின் காப்பர் தேவையை பூர்த்தி செய்ய அதிரடியில் அதானி

Published On 2024-02-04 12:36 GMT   |   Update On 2024-02-04 12:36 GMT
  • முந்த்ரா நகரில் 1.2 பில்லியன் மதிப்பீட்டில் காப்பர் ஆலை உருவாகி வருகிறது
  • மின்சார வாகனங்களின் உற்பத்திக்கு காப்பர் ஒர் இன்றியமையாத தேவை

இந்தியாவின் முன்னணி கோடீசுவரர்களில் ஒருவர், குஜராத் மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் அதானி (61). இவரது நிறுவனம், அதானி குழுமம் (Adani Group).

பல்வேறு உலக நாடுகளில் பல துறைகளில் பல்லாயிரம் கோடி வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் அதானி குழுமம், துறைமுக கட்டமைப்பு மற்றும் செயலாக்கத்தில் முக்கிய நிறுவனமாக திகழ்கிறது.

இவை தவிர, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களின் நிர்வாகம், மின்சக்தி உற்பத்தி மற்றும் பகிர்மானம், சுரங்கம், இயற்கை எரிவாயு, உணவு மற்றும் பல உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் அதானி குழுமம் கால் பதித்து வெற்றி கொடி நாட்டி வருகிறது.

இந்நிலையில், குஜராத் மாநில கட்ச் மாவட்டத்தின் முந்த்ரா (Mundra) நகரில் அதானி குழுமம், உலகின் மிக பெரிய "காப்பர்" (செம்பு) உற்பத்தி ஆலையை உருவாக்கி வருகிறது.

இது முழு செயல்பாட்டிற்கு வந்ததும் காப்பர் தேவைக்காக அயல்நாடுகளை இந்தியா சார்ந்திருக்கும் நிலை பெருமளவு குறைந்து விடும்.

சுமார் 1.2 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் இந்த ஆலை உருவாக்கப்பட்டு வருகிறது.


2029 வருட காலகட்டத்தில் 1 மில்லியன் டன் உற்பத்தி இலக்கை எட்டவுள்ளது.

ஒவ்வொரு நாட்டிற்கும் படிம எரிபொருள் (fossil fuel) சார்பு நிலையில் இருந்து பசுமை எரிபொருள் பயன்பாட்டிற்கு மாற தேவைப்படும் கட்டமைப்பிற்கும், மின்சார வாகனங்கள், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள், சோலார் செல்கள், பேட்டரிகள், காற்றாலை மின்சாரம் உள்ளிட்ட அனைத்தின் உருவாக்கத்திற்கும் காப்பர் தேவைப்படுகிறது.

இதற்கிடையே, பல்வேறு காரணங்களால் மூடப்பட்ட, 4 லட்சம் டன்கள் உற்பத்தி திறன் படைத்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மீண்டும் திறந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர அதன் உரிமையாளரான வேதாந்தா லிமிடெட் நிறுவனம் தீவிரமாக முயன்று வருகிறது.

எஃகு மற்றும் அலுமினியம் ஆகிய உலோகங்களுக்கு அடுத்த நிலையில் தொழில்துறைக்கு மிகவும் தேவைப்படும் உலோகமாக காப்பர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது, உலகின் பெருமளவு காப்பர் உற்பத்தியில் முன்னணியில் உள்ள சிலி (Chile) மற்றும் பெரு (Peru) ஆகிய இரு நாடுகள் பூர்த்தி செய்து வருகின்றன.

Tags:    

Similar News