குழந்தைகளின் ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் பரப்பிய என்ஜினீயர் உள்பட 12 பேர் கைது
- கேரளாவை சேர்ந்த பலர் குழந்தைகளுக்கு எதிரான சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது தெரியவந்தது.
- தனிப்படையினர் மாநிலம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
மேலும் சமூக வலைதளங்களில் குழந்தைகள் ஆபாச படங்களையும் சிலர் பரப்பி வந்தனர். அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க சைபர் கிரைம் போலீசார் முயற்சி மேற்கொண்டனர்.
இதில் கேரளாவை சேர்ந்த பலர் குழந்தைகளுக்கு எதிரான சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது தெரியவந்தது. அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் மாநிலம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் குழந்தைகளின் ஆபாச படங்களை இணைய தளத்தில் வெளியிட்டது, அவற்றை பலருக்கும் பகிர்ந்தது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக 142 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
மேலும் இந்த வழக்குகளில் தொடர்புடைய நபர்களை போலீசார் தேடிவந்தனர். இதற்காக ஒரே நேரத்தில் மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டை நடைபெற்றது.
போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் சாப்ட்வேர் என்ஜினீயர் உள்பட 12 பேர் சிக்கினர். அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து கம்ப்யூட்டர் உள்ளிட்ட எந்திரங்களையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் மெமரி கார்டுகள், செல்போன்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டது.