இந்தியா

இந்தூர் கோவில் படிக்கட்டு கிணறு இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு - பிரதமர், ராகுல் இரங்கல்

Published On 2023-03-30 19:01 GMT   |   Update On 2023-03-30 19:01 GMT
  • மத்திய பிரதேசம் இந்தூரில் உள்ள கோவிலில் படிக்கட்டு கிணறு இடிந்தது.
  • இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

போபால்:

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள பெலேஷ்வர் மகாதேவ் கோவிலில் ராமநவமி கொண்டாட்டம் நடைபெற்றது. பெலேஷ்வர் மகாதேவ் கோவிலில் படிக்கிணற்றில் வழிபாடு நடத்தியபோது படிக்கட்டுகள் எதிர்பாராத விதமாக திடீரென மளமளவென சரிந்து கீழே விழுந்தது.

படிக்கட்டுகளில் நின்று கொண்டிருந்த பக்தர்கள் கிணற்றுக்குள் தவறி விழுந்தனர். முதல் கட்டமாக 4 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், கோவில் கிணற்றின் படிக்கட்டு இடிந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.

இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்தூரில் துரதிர்ஷ்டவசமாக ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என பதிவிட்டுள்ளார்.

விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ராமநவமியை முன்னிட்டு நடந்த சிறப்பு வழிபாட்டின் போது விபத்து நேரிட்டது பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News