ஓட்டலில் டீ குடிக்க நிறுத்திய போது ஆம்னி பஸ்சில் ரூ.15 லட்சம் நகை கொள்ளை
- உணவு இடைவேளைக்காக பஸ் டிரைவர் விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் பஸ்சை நிறுத்தினார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பையை திருடிச் சென்றவர்களை தேடி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம், டாக்டர் அம்பேத்கர் கோணசீமா மாவட்டம், மண்டப்பேட்டையை சேர்ந்தவர் கீதா ரத்தினம். இவர் ரூ.15 லட்சம் மதிப்பிலான நகைகளை பையில் எடுத்துக்கொண்டு ஐதராபாத் செல்லும் தனியார் ஆம்னி பஸ்சில் ஏறினார்.
30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பஸ் புறப்பட்டு சென்று கொண்டு இருந்தது. உணவு இடைவேளைக்காக பஸ் டிரைவர் விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் பஸ்சை நிறுத்தினார்.
இதனை தொடர்ந்து நர்கெட் பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் டீ குடிப்பதற்காக அங்குள்ள ஓட்டல் முன்பு பஸ்சை நிறுத்தனார் . கீதா ரத்தினம் தான் கொண்டு வந்த நகை பையை பஸ்சிலேயே வைத்துவிட்டு கீழே இறங்கினார்.
திரும்பி வந்தபோது அவர் இருக்கையில் வைத்து விட்டு சென்ற நகை பையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கீதா ரத்தினம் உடனடியாக பஸ் டிரைவரிடம் தகவல் தெரிவித்தார்.
பஸ் டிரைவர் பஸ்சை நேராக அப்துல்லாபூர் மெட் போலீஸ் நிலையத்திற்கு ஓட்டிச் சென்றார். போலீசார் பஸ்சில் இருந்த அனைத்து பயணிகள் மற்றும் அவரது உடமைகளை சோதனை செய்தனர்.
இருப்பினும் நகை பையை கண்டுபிடிக்க முடியவில்லை. போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பையை திருடிச் சென்றவர்களை தேடி வருகின்றனர்.