இந்தியா

கேரளாவில் இருந்து துபாய் சென்ற விமானத்தில் திடீர் புகை- 176 பயணிகள் தப்பினர்

Published On 2023-09-28 04:18 GMT   |   Update On 2023-09-28 04:20 GMT
  • விமானம் கண்ணூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
  • புகை வந்ததற்கான காரணம் குறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று அந்த விமானம் வழக்கம்போல் துயாய்க்கு புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் பயணிகள், பணியாளர்கள் என்று 176 பேர் பயணித்தனர்.

விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, சரக்கு பெட்டி இருந்த பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. இதனை கவனித்த பணியாளர்கள் உடனடியாக விமானிக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து விமானத்தை தரையிறக்க கோழிக்கோடு விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை விமானி தொடர்பு கொண்டார்.

ஆனால் கோழிக்கோடு விமான நிலையத்தில் சில ஓடுபாதைகளில் பணிகள் நடைபெற்று வருவதால், துபாய் விமானத்தை அங்கு உடனடியாக தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் கண்ணூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

பின்பு அதிலிருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் விமானத்தில் இருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். பின்பு விமானத்தில் வந்த புகை கட்டுப்படுத்தப்பட்டது. புகை வந்தது உடனடியாக கவனிக்கப்பட்டு, விமானம் தரையிறக்கப்பட்டதால் பெரிய அளவில் விபத்து நடக்காமல் தவிர்க்கப்பட்டது.

மேலும் விமானத்தில் இருந்த பயணிகளும் அதிர்ஷ்டவசமாக தப்பினர். விமானத்தில் புகை வந்ததற்கான காரணம் குறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News