இந்தியா (National)

18 வயதில் ஐபிஎஸ்... 2 லட்சம் பணம் கொடுத்து ஏமாந்த இளைஞர் - பீகாரில் பரபரப்பு

Published On 2024-09-21 13:12 GMT   |   Update On 2024-09-21 13:12 GMT
  • 2 லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் போலீசில் வேலை வாங்கி தருகிறேன் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
  • ஐபிஎஸ் அதிகாரியாக நடித்த 18 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

பீகார் மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்த 18 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

மனோஜ் சிங் என்பவர் மித்லேஷ் மாஜி என்ற 18 வயது இளைஞரிடம் 2 லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் போலீசில் வேலை வாங்கி தருகிறேன் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

இதனை உண்மை என நம்பிய இளைஞர் தனது தாய்மாமாவிடம் இருந்து ரூ.2 லட்சம் பணத்தை கடனாக வாங்கி மனோஜ் சிங்கிடம் கொடுத்துள்ளார்.

பின்னர் மனோஜ் சிங் அவரது உடல் அளவீடுகளை எடுத்து அடுத்த நாள் அவரை அழைத்து, ஐபிஎஸ் உடை, பேட்ஜ் மற்றும் துப்பாக்கியை கொடுத்துள்ளார்.

இதனையடுத்து ஐபிஎஸ் அதிகாரி ஆன மகிழ்ச்சியில் ஐபிஎஸ் சீருடையை அணிந்து கொண்டு இடுப்பில் துப்பாக்கியுடன் தாயை சந்தித்து ஆசி பெற சென்றுள்ளார். பின்னர் மீண்டும் மனோஜ் சிங்கை சந்தித்து மீதமுள்ள பணத்தை கொடுக்க அவர் புறப்பட்டுள்ளார். அப்போது அவரைப் பார்க்க கூட்டம் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள ஒருவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 'போலி ஐபிஎஸ் அதிகாரி'யை கைது செய்தனர். கைது செய்யப்படும்போது 'நான் ஒரு ஐபிஎஸ்' என்று அந்த இளைஞர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் அந்த இளைஞரிடம் இருந்து சீருடை மற்றும் துப்பாக்கியை கைப்பற்றிய போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News