உ.பி.யில் கடும் புகை மூட்டத்தால் அடுத்தடுத்து விபத்து: இருவர் பலியான நிலையில் 30-க்கும் மேற்பட்டோர் காயம்
- புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி.
- தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் செல்லும் வாகனம் தெரியாததால் மோதி அடுத்தடுத்து விபத்து ஏற்படுகிறது.
டெல்லி, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்கள் கடுமையான புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக டெல்லி, அதனையொட்டிய உத்தர பிரதேச நகரங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
பனி போன்று புகை மூட்டம் அடர்ந்து காணப்படுவதால் சாலைகளில் வாகனங்கள் செல்வதில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. அருகில் செல்லும் வாகனங்கள் தெரியாத அளிவற்கு புகை மூட்டம் சூழ்ந்துள்ளதால் விபத்துகள் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது.
இன்று உத்தர பிரதேச மாநிலம் நொய்டா மற்றும் மேற்கு உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற விபத்தில் பைக்கில் சென்ற இருவர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
கிழக்கு பெரிபெரல் எக்ஸ்பிரஸ்வே-யில் இரண்டு சரக்கு வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றான மோதி விபத்துக்குள்ளாகின.
பானிபட்டில் இருந்து மதுரா சென்ற பேருந்து முன்னே சென்ற லாரி மீது மோதியுள்ளது. இதில் பேருந்தில் இருந்த 12-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
பரிசாபாத்தில் ஆக்ரா அருகே லாரி மீது கார் மோதி நின்ற நிலையில் அடுத்தடுத்த ஆறு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் பலர் காயம் அடைந்தனர். இதேபோன்று ஏராளமான சொகுசு கார்கள் விபத்தை எதிர்கொண்டன.
புலந்த்ஷாஹ்ர் என்ற இடத்தில் முன்னாள் சென்ற இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில், பைக்கில் சென்றவர் உயிரிழந்தார். பதான் என்ற இடத்திற்கு அருகில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பைக் மீது மோதியதில் ஆசிரியர் பள்ளிக்கு சென்ற வழியில் உயிரிழந்தார்.