ஆந்திராவில் பிரமாண்ட தேர் கவிழ்ந்து 2 பேர் படுகாயம்
- பொது இடத்தில் வைத்து பக்தர்கள் வழிபாடு நடத்திய பிறகு மீண்டும் ஊரை நோக்கி தேரை எடுத்துச் சென்றனர்.
- தேரை வளைத்த நாகேஸ்வரராவ், டிராக்டர் டிரைவர் கண்டுளா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், சிலக்கலுபேட்டை அடுத்த யாதவல்லியில் மகா சிவராத்திரியை முன்னிட்டு டிராக்டரின் மேல் பிரம்மாண்ட தேர் தயார் செய்தனர்.
அலங்கரிக்கப்பட்ட தேரில் சாமியை வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். பொது இடத்தில் வைத்து பக்தர்கள் வழிபாடு நடத்திய பிறகு மீண்டும் ஊரை நோக்கி தேரை எடுத்துச் சென்றனர்.
அப்போது கொட்டப்ப கொண்டா என்ற இடத்தில் தேர் சென்றபோது மின்கம்பியில் உரசாமல் இருப்பதற்காக தேரின் மேல் பகுதியை லேசாக வளைத்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக தேர் திடீரென சரிந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் தேரை வளைத்த நாகேஸ்வரராவ், டிராக்டர் டிரைவர் கண்டுளா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
மேலும் டிராக்டரின் முன் பகுதி நொறுங்கியது. அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு குண்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.