காங்கிரஸ் தலைவர் கமல்நாத் போனை ஹேக் செய்து ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்- குஜராத்தை சேர்ந்த 2 பேர் கைது
- ஹேக்கர்களை தனது பங்களாவுக்கு வந்து கேட்ட பணத்தை வாங்கி செல்லுமாறு கோவிந்த் கோயல் கூறினார்.
- மறைந்திருந்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
குவாலியர்:
மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியும் காங்கிரஸ் மூத்த தலைவராகவும் இருந்து வருபவர் கமல்நாத். இவரது மொபைல் போனை மர்ம மனிதர்கள் ஹேக் செய்தனர். பின்னர் இவரது போனில் இருந்து காங்கிரஸ் பொருளாளர் அசோக் சிங் என்பவரை ஹேக்கர்கள் தொடர்பு கொண்டு ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டினார்கள்.
இதேபோல இந்தூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுர்ஜித்சிங் சதா, குவாலியர் எம்.எல்.ஏ. சதீஷ் சகார்வார் மற்றும் முன்னாள் காங்.பொருளாளர் கோவிந்த் கோயல் ஆகியோரையும் போனில் மிரட்டினார்கள்.
இதையடுத்து அந்த மர்ம மனிதர்களை கையும், களவுமாக பிடிக்க காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்தனர். ஹேக்கர்களை தனது பங்களாவுக்கு வந்து கேட்ட பணத்தை வாங்கி செல்லுமாறு கோவிந்த் கோயல் கூறினார். உடனே 2 பேர் அவரது பங்களாவுக்கு பணம் வாங்க வந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில் அவர்களது பெயர் சாகர்சிங் பார்மர், பிந்து பார்மர் என்பதும் இருவரும் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.