இந்தியா (National)

'சிக்கன் கபாப்' ருசியாக இல்லை என்று சமையல்காரரை சுட்டுக்கொன்ற வாலிபர்கள் கைது

Published On 2023-05-05 06:05 GMT   |   Update On 2023-05-05 07:14 GMT
  • குடிபோதையில் இருந்த அவர்கள் சிக்கன் கபாப் ரோல் வாங்கி சாப்பிட்டனர்.
  • ருசியாக இல்லாத கபாப் சிக்கனுக்கு பணம் தரமாட்டோம் என கூறி காரில் ஏறி புறப்பட்டனர்.

பரேலி:

உத்தரபிரதேசம் பரேலி அருகே பிரேம் நகர் பகுதியில் பிரியதர்ஷினி நகரில் பழமையான ஓட்டல் ஒன்று உள்ளது. ஓட்டலை அங்கூர் சப்பர்வால் என்பவர் நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வாலிபர் ரஸ்தோகி, அவரது நண்பர் தசீம்ஷம்சி என்ற இருவரும் ஓட்டலுக்கு வந்தனர்.

குடிபோதையில் இருந்த அவர்கள் சிக்கன் கபாப் ரோல் வாங்கி சாப்பிட்டனர். உணவு பரிமாறப்பட்டு சாப்பிட்டு முடித்த அவர்கள் சிக்கன் கபாப் ருசியாக இல்லை என்று ஓட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் தகராறு செய்தனர்.

சிக்கன் தயாரித்த சமையல்காரரை கூப்பிடுங்கள் என ஆவேசமாக வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டனர். ருசியாக இல்லாத கபாப் சிக்கனுக்கு பணம் தரமாட்டோம் என கூறி காரில் ஏறி புறப்பட்டனர்.

அப்போது ஓட்டல் உரிமையாளர் சமையல்காரர் நசீர்அகமதுவை அழைத்து அவர்களிடம் பணத்தை வாங்கி வருமாறு கூறினார். அவர் தகராறு செய்த வாலிபர்களிடம் சென்று சிக்கன் சாப்பிட்டதற்கான பில் தொகை ரூ.120-ஐ கேட்டார்.

ருசியாக சமைக்காத நீ எங்களிடமே பணம் கேட்கிறாயா? என்று கேட்டு நசீர் அகமதை துப்பாக்கியால் சுட்டனர். இதில் நெற்றியில் குண்டு பாய்ந்த அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தார். பின்னர் இருவரும் காரில் ஏறி தப்பி சென்றனர்.

ரஸ்தோகிக்கு உத்தி ரபிரசேத்தில் அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. ரஸ்தோகியின் தந்தையின் பெயரில் உரிமம் உள்ள துப்பாக்கியை அவர் எடுத்து வந்துள்ளார்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி ரஸ்தோகி, தசீம்ஷம்சி ஆகிய 2 பேரை கைது செய்தனர். ரஸ்தோகியின் தந்தை மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட நசீர்அகமதுக்கு மனைவி மற்றும் 10 வயதில் பெண் குழந்தை உள்ளனர்.

Tags:    

Similar News