ஆந்திராவில் முதலாளி மகளை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு ஜெயில்
- கடந்த 2019-ம் ஆண்டு கடை உரிமையாளரின் 17 வயது மகளை தனது வீட்டிற்கு வரவழைத்தார்.
- பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ரூ 50 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார்.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம், ஓங்கோல் மாவட்டம், கனி கிரியை சேர்ந்தவர் மகபூப் பாஷா (வயது 35). இவர் அதே பகுதியில் உள்ள மெக்கானிக் கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
கடந்த 2019-ம் ஆண்டு கடை உரிமையாளரின் 17 வயது மகளை தனது வீட்டிற்கு வரவழைத்தார். பின்னர் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரது விருப்பத்திற்கு மாறாக பலமுறை பலாத்காரம் செய்தார்.
இதேபோல் ஐதராபாத் அழைத்துச் சென்றும் அங்கு சிறுமியை பலாத்காரம் செய்தார்.
இதுகுறித்து சிறுமி அவரது பெற்றோரிடம் தெரிவித்தார். ஓங்கோல் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் மெகபூப் பாஷாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை கடந்த 3 ஆண்டுகளாக ஓங்கோல் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்தது. நேற்று வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி சோமசேகர் தீர்ப்பு வழங்கினார்.
மைனர் பெண்ணை பலாத்காரம் செய்த மகபூப் பாஷாவிற்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ 3 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ரூ 50 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார்.