இந்தியா

'உனது மகளையும்..' பிரஜ்வல் ரேவண்ணா மீது 2000 பக்க குற்றப் பத்திரிகை தாக்கல் - திடுக்கிடும் உண்மைகள்

Published On 2024-08-25 08:55 GMT   |   Update On 2024-08-25 08:56 GMT
  • 150 பேரின் சாட்சிகளையும் , பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களையும் பெற்று 2,144 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை தாக்கல்
  • 'எந்த வழக்காக இருந்தாலும் அதை எப்படி மூட வேண்டும் என்று எனக்குத் தெரியும், நான் ஒரு எம்.பி., என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது'

பிரஜ்வல் ரேவண்ணா 

கர்நாடக மாநிலம் ஹாசன் பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராகப் போட்டியிட்டார். ஆனால் இடையே பல்வேறு பெண்களுக்கு பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் துன்புறுத்தல் அளித்த 2,976 ஆபாச வீடியோக்கள் வெளியாகி நிலைமையை தலைகீழாக மாற்றியது. வீடியோ வெளியானதைத் தொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணா மீது பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் 5 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டிற்குத் தப்பி சென்றார். இதையடுத்து அவரை பிடிக்க சிறப்புப் புலனாய்வு குழுவினர் தீவிரம் காட்டி வந்தனர். அதன் பேரில் பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து பிரஜ்வல் ரேவண்ணாவை சிறப்புப் புலனாய்வு குழுவினர் கடந்த 31-ந்தேதி கைது செய்தனர். இந்த விவகாரத்தால் பாஜக சார்பில் போட்டியிட்ட ரேவண்ணா ஹசன் தொகுதியில் படுதோல்வி அடைந்தார். அவர் மீது சிறப்புப் புலனாய்வு குழுவினர் விசாரணை ,மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று இந்த விவகாரம் தொடர்பாக பிரஜ்வல் மீதும் அவரது தந்தை எச்.டி ரேவண்ணா மீதும்  2,144 பக்கங்கள் அடங்கிய 4 குற்றப்பத்திரிகைகளை பெங்களூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். 150 பேரின் சாட்சிகளையும் , பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களையும் பெற்று இந்த குற்றப்பத்திரிகையானது தயாரிக்கப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகை 

பெண்களை பாலியல் தொடர்ச்சியாக பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தி பலாத்காரம் செய்தது, அதை வீடியோ எடுத்து பெண்களை மிரட்டியது என பிரஜ்வல் ரேவண்ணாவின் செயல்கள் குறித்த அதிர்ச்சியூட்டும் உண்மைகளைச் சிறப்புப் புலனாய்வுக் குழு வெளிக்கொணர்ந்துள்ளது. அந்த குற்றப்பத்திரிகையில், பிரஜ்வல் ரேவண்ணா பல்வேறு பெண்களைப் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து அவர்களை மிரட்டி மீண்டும் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதை நிரூபிக்கும் விதமாக அதில் உயிரியல், உடல், அறிவியல், மொபைல், டிஜிட்டல் மற்றும் பிற தொடர்புடைய ஆதாரங்களையும் சிறப்புப் புலனாய்வுக் குழு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. குறிப்பாக ரேவண்ணாவின் மனைவி பவானி மூலம் விடுதி ஒன்றும் பணியில் சேர்ந்த பெண் பின்னர் ரேவண்ணாவின் வீட்டில் பணி செய்ய அழைக்கப்பட்டுள்ளார்.

பணியில் சேர்ந்த பெண்ணை 2019 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் தொடர்ச்சியாக பலாத்காரம் செய்து வந்துள்ளார் பிரஜ்வல் ரேவண்ணா. 2020 இல் பெங்களூருவில் உள்ள வீட்டில் வைத்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பிரஜ்வல் ரேவண்ணா அதை வீடியோ எடுத்துள்ளார். அப்போது அந்த பெண், தான் இங்கு நடந்ததை வெளியே சொல்லப் போவதாகக் கூறியுள்ளார்.

அதற்கு பிரஜ்வல் ரேவண்ணா, இதை நீ வெளியே சொன்னால் உனது கணவனை சிறையில் தள்ளுவேன், உனக்கு என்ன செய்தேனோ அதையே உனது மகளுக்கும் செய்வேன். எந்த வழக்காக இருந்தாலும் அதை எப்படி மூட வேண்டும் என்று எனக்குத் தெரியும், நான் ஒரு எம்.பி [பாராளுமன்ற உறுப்பினர்] என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்று மிரட்டல் விடுத்துள்ளதாக அந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அடுத்த சில தினங்களில் எஞ்சியுள்ள தகவல்களும் தாக்கல் செய்யப்படும் என்று சிறப்புப் புலனாய்வுக் குழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

Tags:    

Similar News