செய்திகள்

உத்தரபிரதேசத்தில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியை அடித்து உதைத்த போலீசார்

Published On 2017-07-26 09:14 GMT   |   Update On 2017-07-26 09:14 GMT
உத்தரபிரதேசத்தில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியை 2 போலீசார் அடித்து உதைத்ததில் அவரது மூக்கு எலும்பு உடைந்து ரத்தம் கொட்டியது. இவர் தாக்கப்பட்ட தகவல் அறிந்ததும் மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
லக்னோ:

உத்தரபிரதேச மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர் துளசி கவுர். இவர், அலிகார் நகரில் வசித்து வந்தார்.

தனது மனைவியுடன் காரில் வெளியே சென்ற அவர், சாலையில் காரை நிறுத்தி விட்டு அருகில் உள்ள ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்றார்.

திரும்பி வந்த போது, 2 போலீஸ்காரர்கள் அந்த இடத்துக்கு வந்து காரை அங்கிருந்து எடுக்கும்படி கூறினார்கள்.

அப்போது துளசி கவுருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த போலீசார் துளசி கவுரை அடித்து உதைத்தனர்.

முகத்தில் ஓங்கி குத்தினார்கள் இதில், அவரது மூக்கு எலும்பு உடைந்து ரத்தம் கொட்டியது.

இது தொடர்பாக அவரது மனைவி உடனடியாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

துளசி கவுர் தாக்கப்பட்ட தகவல் அறிந்ததும் மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து அவருடைய நிலைமை பற்றி கேட்டு அறிந்தனர்.

மேலும் மாவட்ட கலெக்டர் ஹரிஸ்கேஷ், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் பாண்டே ஆகியோரும் ஆஸ்பத்திரிக்கு வந்து அவருக்கு ஆறுதல் கூறினார்கள். சம்பந்தப்பட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர்.

துளசி கவுர் உத்தர பிரதேசத்தில் பல்வேறு மாவட்டங்களில் கலெக்டராகவும் மற்றும் மாநில உயர் அதிகாரியாகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News