செய்திகள்

குஜராத்: தாயை மகனே மாடியில் இருந்து தூக்கிப்போட்டு கொன்ற கொடூரம் - வீடியோ

Published On 2018-01-05 21:28 GMT   |   Update On 2018-01-05 21:28 GMT
குஜராத்தின் ராஜ்கோட்டில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தாயை கவனித்துக்கொள்ள முடியாத அவரது மகனே மாடியில் இருந்து தூக்கிப்போட்டு கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. #Gujarat #Sonkillsmother #throwsoffterrace

ராஜ்கோட்: 

குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் வசித்து வந்தவர் ஜெய்ஸ்ரீபென் வினோத்பாய் நத்வானி (64). இவருக்கு சந்தீப் நத்வானி (36) என்ற மகன் உள்ளார். சந்தீப் ராஜ்கோட்டில் உள்ள பார்மஸி கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். தாயும் மகனும் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். ஜெய்ஸ்ரீபென் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். படுத்த படுக்கையான அவரை மகன் சந்தீப் கவனித்து வந்தார். 

இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி ஜெய்ஸ்ரீபென் அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளில் சந்தீப் தனது தாயை மாடிக்கு படி வழியாக தூக்கி செல்வதும், பின்னர் அவர் மட்டும் தனியாக திரும்பிவந்து, அவரது வீட்டின் கதவை திறந்து உள்ளே செல்லும் காட்சிகளும் பதிவாகி உள்ளன.



சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகள் அவர் உள்ளே சென்ற அடுத்த சில நிமிடங்களில் ஒரு நபர் ஓடிவந்து ஏதோ கூறுகிறார். இதையடுத்து சந்தீப் பதறியடித்துக்கொண்டு கீழே செல்வதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காட்சிகளை கைப்பற்றிய போலீசார் சந்தீப்பிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் தாயை மாடியில் இருந்து தள்ளி கொலை செய்ததாக சந்தீப் ஒப்புக்கொண்டார். 

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தாயை கவனித்து கொள்வதில் சலிப்படைந்ததால் கொலை செய்ய திட்டமிட்டதாகவும், அதன்படி மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்து தற்கொலை நாடகமாடியதாகவும் சந்தீப் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பெற்ற தாயை மகனே கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews #Gujarat #Sonkillsmother #throwsoffterrace


Similar News