செய்திகள்

ரோஹிங்கியா அகதிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்

Published On 2018-05-09 13:51 GMT   |   Update On 2018-05-09 13:51 GMT
இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ரோஹிங்கியா அகதிகளுக்கு பாரபட்சம் காட்டாமல் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று சுப்ரீம் கோர்ட்டிடம் தெரிவித்துள்ளது. #RohingyaRefugees #SC
புதுடெல்லி:

மியான்மரில் ராணுவ அடக்குமுறைக்கு பயந்து வெளியேறிய ரோஹிங்கியா முஸ்லிம்கள் இந்தியாவின் ஜம்மு, ஐதராபாத், அரியானா, உத்தரப்பிரதேசம், டெல்லி மற்றும் ராஜஸ்தானில் அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர். இவர்களில் பலர் பயங்கரவாத இயங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து என தெரிவித்த மத்திய அரசு, சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை வெளியேற்ற தனிக்குழுவை அமைத்தது.

மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து ஐக்கிய நாடுகள் அகதிகள் முகமையில் பதிவுசெய்து இந்தியாவில் தங்கியுள்ள ரோஹிங்கியா அகதிகளான முஹம்மது சலிமுல்லா, முஹம்மது ஷாகிர் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். சர்வதேச அகதிகள் பாதுகாப்பு சட்டம் மற்றும் மனித உரிமை சட்டங்களை மீறிய வகையில், அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள தங்களை மீண்டும் மியான்மருக்கு திருப்பி அனுப்ப கூடாது என அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கவில்ன்கர், சந்திரசூட் அமர்வு விசாரித்து வருகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி இந்த வழக்கின் மறுவிசாரணையின்போது, தமிழகத்தில் இலங்கை அகதிகளுக்கு வழங்கப்படும் கல்வி, மருத்துவம் போன்ற வசதிகளை மற்ற மாநிலங்களும் ரோஹிங்கியா அகதிகளுக்கு அளிக்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் புதிய கோரிக்கை விடுத்திருந்தனர்.

மனுதாரர்களின் கோரிக்கையை விசாரித்த நீதிபதிகள், இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை. எனினும், டெல்லி மற்றும் அரியானாவில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் அரசு சார்பில் வழங்கப்பட்ட அடிப்படை வசதிகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை மே மாதம் 9-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ரோஹிங்கியா அகதிகளுக்கு பாரபட்சம் காட்டாமல் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

இதுதொடர்பாக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சார்பில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த அறிக்கையில், ’சுப்ரீம் கோர்ட் கடந்த மாதம் 9-ம் தேதி அறிவுறுத்தியதை தொடர்ந்து அரியானாவில் உள்ள மேவாட் ரோஹிங்கியா அகதிகள் முகாம் மற்றும் டெல்லி கலின்டி கஞ்ச் பகுதியில் உள்ள அகதிகள் முகாம் ஆகியவற்றில் கடந்த 23,24 தேதிகளில் அதிகாரிகள் குழு ஆய்வு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின்போது, இந்தியாவின் பிறபகுதிகளில் உள்ள குடிசைப்பகுதிகளில் வாழும் நம் நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் சுகாதாரம், குடிநீர், கழிப்பறை, மருத்துவம், கல்வி ஆகிய அடிப்படை வசதிகள் அங்குள்ள ரோஹிங்கியா அகதிகளுக்கும் அளிக்கப்படுவதை அதிகாரிகள் குழு கண்டறிந்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

சில கட்டுப்பாடுகளை தவிர, ரோஹிங்கியா அகதிகள் விவகாரத்தில் மத்திய அரசு எவ்வித பாரபட்சமும் காட்டவில்லை’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை பரிசீலனைக்கு ஏற்றுகொண்ட சுப்ரீம் கோர்ட் இவ்வழக்கின் மறுவிசாரணையை வரும் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. #RohingyaRefugees #SC
Tags:    

Similar News