செய்திகள்

கர்நாடகத்தில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - ஆட்சியை கைப்பற்ற காங்., பா.ஜனதா முயற்சி

Published On 2018-05-14 06:40 GMT   |   Update On 2018-05-14 07:35 GMT
கர்நாடக மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமையவே அதிக வாய்ப்புள்ளதாகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. #Karnatakaelection2018
பெங்களூர்:

கர்நாடகா மாநில சட்டசபைக்கு கடந்த சனிக்கிழமை நடந்த தேர்தலில் 72.36 சதவீதம் வாக்குகள் பதிவானது.

கர்நாடகா மாநில தேர்தல் வரலாற்றில் இதுவரை இந்த அளவுக்கு வாக்குகள் பதிவானதில்லை. இதன் காரணமாக கர்நாடகாவில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்பதில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் வேட்பாளர் மரணம் காரணமாக ஒரு தொகுதியிலும் போலி வாக்காளர் அடையாள அட்டையால் இன்னொரு தொகுதியிலும் தேர்தல் நடக்கவில்லை. மற்ற 222 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது.

பா.ஜ.க., காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவியது. கர்நாடகாவில் தனித்து ஆட்சி அமைக்க வேண்டுமானால் 113 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த மேஜிக் நம்பரை எட்டப்போவது யார் என்பது பரபரப்பான சஸ்பென்சாக உள்ளது.

முதலில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகள் அனைத்தும் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தன. ஆனால் ஓட்டுப்பதிவு தினத்தன்று நடத்தப்பட்ட கருத்து கணிப்புகள் வேறுவிதமாக அமைந்தன.

சில கருத்து கணிப்புகள் காங்கிரசுக்கு சாதகமாகவும், சில கருத்து கணிப்புகள் பா.ஜ.க.வுக்கு சாதகமாகவும் உள்ளன. பெரும்பாலும் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தேவேகவுடா தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு சுமார் 30 இடங்கள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கர்நாடகாவில் அடுத்து யார் ஆட்சி அமைப்பார் என்பதை முடிவு செய்யும் கிங்மேக்கராக தேவே கவுடா திகழ்வார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாளை (செவ்வாய்க் கிழமை) கர்நாடகாவில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. நாளை காலை 10 மணிக்கெல்லாம் முன்னிலை நிலவரம் தெரிந்து விடும். அப்போதே யார் ஆட்சி அமைப்பது என்பது உறுதியாகி விடும்.

இந்த நிலையில் பா.ஜனதாவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்கும் வகையில் பெரும்பான்மை இடங்கள் கிடைக்காது என்று கூறப்படுவதால் இரு கட்சி தலைவர்களும் இப்போதே ஆள் பிடிக்கும் வேலையை தொடங்கி விட்டனர். சில தொகுதிகளில் சுயேட்சைகள் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை இரு கட்சி தலைவர்களும் ரகசியமாக சந்தித்து பேசி வருகிறார்கள்.

இதற்கிடையே மதசார் பற்ற ஜனதா தள மாநில தலைவர் குமாரசாமி திடீரென சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார். அவர் ஓய்வு எடுப்பதற்காக சென்றுள்ளதாக கூறப்பட்டாலும் அவர் அடுத்து ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் பற்றி ஆலோசிக்கவே சிங்கப்பூர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் குமார சாமியை சந்தித்து பேச பா.ஜனதா கட்சியும், காங்கிரஸ் கட்சியும் ரகசியமாக தங்களது பிரதிநிதிகளை அனுப்பி உள்ளன. இரு கட்சிகளும் போட்டி போட்டு குமாரசாமியிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் குமாரசாமி இதுவரை யாரிடமும் பிடி கொடுக்கவில்லை. அவர் தாமே முதல்வராக வேண்டும் என்று புதிய வியூகம் அமைத்து பேசி வருவதாக கூறப்படுகிறது. இதனால் கர்நாடக மாநில பா.ஜ.க., காங்கிரஸ் தலைவர்கள் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தேவே கவுடாவும், குமாரசாமியும் ஓட்டு எண்ணிக்கைக்கு பிறகு பா.ஜ.க.வை ஆதரிப்பார்களா? அல்லது காங்கிரசை ஆதரிப்பார்களா? என்பதில் மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. காங்கிரசை பொறுத்தவரை குமாரசாமி விதிக்கும் எந்த நிபந்தனைக்கும் தலை அசைக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால்தான் சித்தராமையா இல்லாமல் வேறு ஒருவரை குறிப்பாக தலித் ஒருவரை முதல்வராக தேர்வு செய்தால் காங்கிரசை ஆதரிக்க தயார் என்று குமாரசாமி கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் தொடர்ச்சியாகத்தான் முதல்-மந்திரி சித்தராமையா, “முதல்வராக தலித்தை தேர்வு செய்தால் எதிர்க்க மாட்டேன்” என்று நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

தேவேகவுடாவை பொறுத்தவரை அவர் 3-வது அணிக்கு ஆதரவாக இருந்து வருகிறார். மம்தா பானர்ஜி, சந்திரசேகரராவ் ஆகியோர் தேவேகவுடாவை 3-வது அணிக்கு தலைமை ஏற்கும்படி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். எனவே 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 3-வது அணியில் முக்கிய பங்கு வகிக்கலாம் என்ற திட்டத்துடன் இருக்கும் தேவேகவுடா பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர தயங்கிய நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

பா.ஜ.க.வுடன் உறவு இல்லை என்பதை கடந்த 2 மாதங்களில் பல தடவை தேவேகவுடா உறுதிப் பட கூறி விட்டார். தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல்காந்தி தேவேகவுடாவை குற்றம் சாட்டி பேசுகையில், “பா.ஜ.க.வின் பி-அணியாக மதசார்பற்ற ஜனதா தளம் திகழ்கிறது” என்று கூறியிருந்தார்.

இதற்கு தேவேகவுடா உடனே மறுப்பு தெரிவித்தார். பா.ஜ.க.வின் பி-அணியாக செயல்பட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று உறுதிப்பட கூறியிருந்தார்.

ஒரு சமயம் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக குமாரசாமி கருத்துகளை வெளியிட்டதாக கூறப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தேவே கவுடா, “கர்நாடகா சட்டசபை தேர்தலில் தனிப் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் எதிர்க்கட்சியாக இருப்போமே தவிர பாஜ.க.வுடன் கூட்டணி அமைக்க மாட்டோம். ஒருவேளை குமாரசாமி பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று முயற்சி செய்தால் அவரை மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்குவதற்கும் தயங்க மாட்டேன்” என்று கூறியிருந்தார்.

எனவே பா.ஜ.க.வுடன் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைக்குமா? என்பதில் கேள்விக்குறி நீடிக்கிறது. ஒருவேளை தொங்கு சட்டசபை அமையும் பட்சத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தேவே கவுடாவுடன் நேரடி பேச்சு வார்த்தையில் ஈடுபடக்கூடும் என்று கூறப்படுகிறது.

தேவேகவுடா 3-வது அணியில் தீவிரமாக இருப்பதால் குமாரசாமிக்கு பா.ஜ.க. தலைவர்களில் சிலர் ஏற்கனவே வலைவீசி வைத்துள்ளனர். முதல்வர் பதவி உள்பட பல சலுகைகளை குமாரசாமியிடம் பா.ஜ.க. கூறி இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே தேர்தல் முடிவுக்கு பிறகு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காவிட்டால் ஆட்சி அமைக்க ஆதரவு கொடுக்கும் வி‌ஷயத்தில் தேவேகவுடாவுக்கும், குமாரசாமிக்கும் ஒருமித்த கருத்து ஏற்படுமா? என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.

இந்த நிலையில் மதசார் பற்ற ஜனதா தளத்தின் செய்தி தொடர்பாளர் தனீஷ் அலி ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை. காங்கிரஸ் கட்சிக்கு தனிபெரும்பான்மை பலம் கிடைக்காவிட்டால் அது காங்கிரஸ் பொறுப்பாகும். 2019-ம் ஆண்டு தேர்தலை அவர்கள் எப்படி சந்திக்க முடியும். எனவே ஓட்டு எண்ணிக்கைக்கு பிறகே எங்கள் நிலையை தெரிவிப்போம்” என்று கூறினார்.

மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் உள்ள பெரும்பாலான தலைவர்கள் தொங்கு சட்டசபை அமைந்தால் காங்கிரசை ஆதரிக்க வேண்டும் என்று கூறுவதாக தெரிகிறது. ஆனால் அதே அளவுக்கு காங்கிரசை ஆதரிக்க கூடாது என்றும் அக்கட்சியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

முந்தைய தேர்தல்களில் மாநில கட்சிகளை குறிப்பாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை பலவீனப்படுத்தியதில் காங்கிரசுக்கு அதிக பங்கு உண்டு என்று குமாரசாமியின் ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே குமாரசாமியை காங்கிரஸ் கட்சி எந்த அளவுக்கு திருப்திப்படுத்துகிறதோ அந்த அளவுக்குதான் காங்கிரசுக்கு மதசார்பற்ற ஜனதா தளத்தின் ஆதரவு கிடைக்கும்.

ஆனால் பா.ஜ.க. தலைவர்கள் அதற்கு அனுமதிப்பார்களா? என்று தெரியவில்லை. அவர்களும் மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் உள்ளனர்.

ஓட்டு எண்ணிக்கை நடப்பதற்கு முன்பே கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளை பா.ஜ.க.வும், காங்கிரசும் தீவிரமாக தொடங்கி விட்டதால் அம்மாநிலத்தில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டது. ஆட்சியை பிடிக்கப் போவது யார் என்று கோடிக்கணக்கான ரூபாயில் சூதாட்டமும் “களை” கட்டி உள்ளது. #Karnatakaelection2018
Tags:    

Similar News