செய்திகள்

தண்ணீர் திறப்பு உத்தரவை செயல்படுத்துவது எப்படி? - காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் ஆலோசனை

Published On 2018-07-05 09:50 GMT   |   Update On 2018-07-05 09:50 GMT
உச்சநீதிமன்ற உத்தரவுப் படி தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பை செயல்படுத்துவது குறித்து டெல்லியில் இன்று நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. #CauveryIssue
புதுடெல்லி:

காவிரி நீர் விவகாரத்தில் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுப்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தையும், அதன் துணை அமைப்பான காவிரி ஒழுங்காற்று குழுவையும் அமைத்தது.

அதற்கான பிரதிநிதிகளை மத்திய அரசும், தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுவை ஆகிய 4 மாநில அரசுகளும் நியமித்துள்ளன.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதலாவது கூட்டம் டெல்லியில் கடந்த 2-ந்தேதி மத்திய நீர்வளத்துறை செயலாளர் மசூத்உசேன் தலைமையில் நடந்தது. இதில் 4 மாநில பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தமிழகத்துக்கு ஜூலை மாதத்துக்கான நீர் திறப்பு அளவான 31.24 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் காவிரியில் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை செயல்படுத்துவது குறித்து காவிரி ஒழுங்காற்று குழு முடிவு செய்யும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து முதலாவது ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் இன்று நடந்தது. மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் தலைமை பொறியாளர் நவீன்குமார் தலைமை தாங்கினார். இதில் தமிழகத்தின் சார்பில் பொதுப்பணித்துறை பொறியாளர் செந்தில்குமார், புதுவை பொறியாளர் சண்முகசுந்தரம், கர்நாடக பொறியாளர் பிரசன்னா மற்றும் கேரள பிரதிநிதி கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தமிழகம், கர்நாடகத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு, நீர் வரத்து குறித்து ஆலோசிக்கப்பட்டு தமிழகத்துக்கு திறக்கப்பட வேண்டிய நீரின் அளவை எவ்வாறு திறக்க வேண்டும் என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. #CauveryIssue
Tags:    

Similar News