செய்திகள் (Tamil News)

உத்தரகாண்ட் மாநில எல்லையில் 7 இந்திய கிராமங்களுக்கு உணவு பொருள் வழங்கும் சீனா

Published On 2018-10-05 05:35 GMT   |   Update On 2018-10-05 05:35 GMT
உத்தரகாண்ட் மாநில எல்லையில் 7 கிராமங்களில் வாழும் மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை சீன பகுதிகளுக்கு சென்று வாங்கி வருகின்றனர். #Food #villages

டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலத்தில் பிதோர்கர் மாவட்டத்தின் சில பகுதிகள் சீன எல்லையில் உள்ளன. இங்குள்ள தர்சுலா பகுதி பயாஸ் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இது மிகவும் உள்ளடங்கிய பகுதி.

எனவே இப்பகுதியில் உள்ள பஞ்சி, கஞ்ச்சி கார்பயாங், குத்தி, நபால், நாபி மற்றும் ராங்காங் ஆகிய 7 கிராமங்களில் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான உணவு பொருட்கள் சரிவர கிடைப்பதில்லை.

உப்பு, சமையல் எண்ணெய், அரிசி, கோதுமை உள்ளிட்டவை கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். இக்கிராமங்கள் சீன எல்லையில் இருப்பதால் பாதுகாப்பை காரணம் காட்டி முக்கிய சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன.

இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்ல முடிவதில்லை. எனவே மேற்கண்ட 7 கிராமங்களில் வாழும் 400 குடும்பத்தினர் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை சீன பகுதிகளுக்கு சென்று வாங்கி வருகின்றனர்.


மேலும் தேவையான பொருட்களை மற்றொரு அண்டை நாடான நேபாளம் சென்றும் வாங்குகின்றனர். உத்தரகாண்ட் மாநில அரசு அங்குள்ள 2 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்களை ரேசன் கடைகள் மூலம் வழங்குகிறது.

அது போதுமானதாகவும் இல்லை. அதுவும் சரிவர கிடைப்பதில்லை. இதனால் சீனா மற்றும் நேபாள பகுதிகளுக்கு சென்று அத்தியாவசிய உணவு பொருட்களை கூடுதல் விலைக்கு வாங்க வேண்டிய அவல நிலை உள்ளது.

சொந்த நாட்டிலேயே அனாதைகளாக வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, எல்லையில் உள்ளடங்கி உள்ள கிராமங்களுக்கு ரேசன் பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் தாராளமாக கிடைக்க மத்திய- மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #Food #villages

Tags:    

Similar News