இந்தியா (National)

எதிர்த்து பேசினால் கிரிமினல் வழக்குப் போடுவீர்களா?.. உ.பி. பாஜக அரசை விளாசிய உச்சநீதிமன்றம்

Published On 2024-10-05 05:12 GMT   |   Update On 2024-10-05 06:10 GMT
  • உ.பி. பாஜக அரசின் நிர்வாகத்தில் நிலவும் சாதிய போக்குகள் தொடர்பாக கட்டுரை ஒன்றை அபிஷேக் வெளியிட்டார்.
  • 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரப் பிரதேச அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அரசை விமர்சிக்கும் பத்திரிகையளர்கள் மீது கிரிமினல் வழக்கு போடுவதை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது. இந்தியாவில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. தீவிர இந்துத்துவ வலதுசாரி போக்கை தொடர்ந்து கண்டித்து வந்த கர்நாடகாவைச் சேர்ந்த கவுரி லங்கேஷ் கடந்த 2017 ஆம் ஆண்டு தனது வீட்டுக்கு வெளியே மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பத்திரிகை சுதந்திரத்தின் மீதான கேள்விகளை எழுப்பியது.

 

தொடர்ந்து தொலைத்தொடர்புத்துறையில் மத்திய அரசு கொண்டுவந்த திருத்தங்கள் கடும் எதிர்ப்புக்கு பின்னர் கைவிடப்பட்டு தற்போது மறு உருவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆளும் பாஜக அரசின் நிர்வாகத்தில் நிலவும் சாதிய போக்குகள் தொடர்பாக கட்டுரை ஒன்றை வெளியிட்டதற்காக அபிஷேக் உபாத்யாய் என்ற பத்திரிகையாளர் மீது லக்னோ போலீசால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதை எதிர்த்து அபிஷேக் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். தற்போது அந்த வழக்கானது உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய் மற்றும் எஸ்.வி.என். பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது பேசிய நீதிபதிகள், ஜனநாயக நாடுகளில் குடிமக்களின் கருத்து சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 19 (1) (a) பிரிவின் கீழ் பத்திரிகையாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன. அரசாங்கத்தை விமர்சிக்கிறார் என்பதற்காக பத்திரிகையாளர் மீது கிரிமினல் வழக்குகள் போடப்படக்கூடாது என்று கூறினர். மேலும் இதுதொடர்பாக 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரப் பிரதேச அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News