செய்திகள்
பாராளுமன்ற தேர்தலில் பெண்களுக்கு 41 சதவீத இடஒதுக்கீடு - வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் மம்தா
மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள 42 பாராளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்ட மம்தா பானர்ஜி, 41 சதவீதம் இடங்களை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளார். #Mamatareleases #TMClist #WBLSpolls
கொல்கத்தா:
மேற்கு வங்காளம் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, இங்குள்ள 42 தொகுதிகளில் போட்டியிடும் தனது வேட்பாளர் பட்டியலை இன்று கொல்கத்தாவில் வெளியிட்டார்.
இதில் 41 சதவீதம் தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். தற்போது எம்.பி.களாக இருக்கும் 10 பேர் இந்த தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் அவர்கள் கட்சிப்பணிகளை கவனிப்பார்கள் என தெரிவித்த மம்தா, வரும் பாராளுமன்ற தேர்தலில் ஜார்கண்ட் மாநிலத்தில் 5 தொகுதிகளிலும், அசாம் மாநிலத்தில் 6 தொகுதிகளிலும், பீகார் மாநிலத்தில் 2 தொகுதிகளிலும், அந்தமானில் உள்ள ஒரு தொகுதியிலும் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். மேலும், ஒடிசா மாநில சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சியின் சார்பில் 10 தொகுதிகளில் போட்டியிடுவோம் எனவும் தெரிவித்தார்.
உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாபில் மாநில கட்சிகளுக்கு ஆதரவு தருவோம்.
மக்கள் மீது மோடி அரசு திணித்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை இந்தியாவில் நடைபெற்ற மோசடிகளில் மிகப்பெரிய மோசடியாகும். மத்தியில் ஆளும் பாஜக மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டி பிளவுப்படுத்த பார்க்கிறது. இந்த தேர்தலில் விவிஐபிக்கள் வரும் ஹெலிகாப்டர் மூலம் ஏராளமான பணத்தை கொண்டுவந்து வாக்களர்களுக்கு வினியோகிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். #Mamatareleases #TMClist #WBLSpolls