செய்திகள் (Tamil News)

பா.ஜனதா தொண்டனுக்கு பாதுகாப்பு இல்லையா? மோடியின் பேச்சுக்கு பினராயி விஜயன் கண்டனம்

Published On 2019-04-27 05:20 GMT   |   Update On 2019-04-27 05:20 GMT
கேரளாவில் பா.ஜனதா தொண்டனுக்கு பாதுகாப்பு இல்லை என்று பேசிய பிரதமர் மோடிக்கு முதல்- மந்திரி பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். #pmmodi #bjp #pinarayivijayan

திருவனந்தபுரம்:

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்த பின்பு பிரதமர் மோடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கேரளாவில் பாரதீய ஜனதா தொண்டர்களுக்கு பாதுகாப்பு இல்லை. வீட்டை விட்டு வெளியே சென்றால் எந்த தாக்குதலுக்கும் ஆளாகாமல் அவர்கள் வீடு திரும்புவார்களா? என்ற நம்பிக்கை இல்லை.

ஆனால் உத்தரபிரதேசத்தில் அப்படிப்பட்ட நிலை இல்லை என்று கூறி இருந்தார்.

பிரதமர் மோடியின் பேச்சு வெளியான சில மணி நேரங்களில் கேரள முதல்-மந்திரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பினராயி விஜயன், பிரதமர் மோடியின் பேச்சுக்கு பதில் கொடுத்தார்.

இது தொடர்பாக அவர், பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள கருத்து வருமாறு:-

கேரளாவில் பாரதீய ஜனதா தொண்டர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை பிரதமர் மோடி எந்த அடிப்படையில் கூறினார் என்பதை தெரிவிக்க வேண்டும். பிரதமரிடம் இருந்து இத்தகைய கருத்தை எதிர்பார்க்கவில்லை.


கேரளாவை பற்றி அவருக்கு தெரியாமல் இருந்தால் மத்திய அரசின் குற்ற ஆவண காப்பக பதிவேடுகளை பார்வையிட்டு உண்மையை தெரிந்து கொள்ளலாம். மத்திய அரசின் ஏஜென்சிகள் வெளியிட்ட தகவல்களில் கேரளம் பாதுகாப்பான பகுதி என்றும், சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதில் சிறப்பாக செயல்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த உண்மை தெரியாமல் பிரதமர் பேசுகிறார்.

சங்பரிவார் அமைப்புகள் சில மாநிலங்களை ஆள்வது போல நினைக்கிறார். கேரளாவில் சட்டம் அனைவருக்கும் பொதுவாகவே உள்ளது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.  #pmmodi #bjp #pinarayivijayan

Tags:    

Similar News