பயமின்றி மதங்களை பின்பற்றும் சுதந்திரம் வேண்டாமா?.. சீக்கியர்கள் குறித்த கருத்துக்கு ராகுல் விளக்கம்
- இந்தியாவில் ஒரு சீக்கியர் டர்பன் அணிவதற்கு அனுமதிக்கப்படுவாரா என்பதற்கான போராட்டம் நடக்கிறது
- கடுமையான எதிர்வினைகள் எழுந்த நிலையில் ராகுல் காந்தி தனது கருத்துக்கு விளக்கம் அளித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பியும் மக்களவை எதிர்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி சமீபத்தில் மேற்கொண்ட அமெரிக்க பயணத்தின்போது பேசிய கருத்துக்கள் பாஜகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக இந்தியாவின் சீக்கியர்கள் டர்பன் அணியவே போராட வேண்டியுள்ளது என்று அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசியிருந்தது விமர்சனத்துக்குள்ளானது.
கடந்த செப்டம்பர் 10 அன்று விர்ஜினியா மாகாணத்தில் ஹெர்ன்டன் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராகுல் காந்தி, இந்தியாவில் ஒரு சீக்கியர் டர்பன் [தலைப்பாகை] அணிவதற்கு அனுமதிக்கப்படுவாரா என்பதற்கும் கதா [சீக்கியர்கள் அணியும் வளையம்] அணிந்து கொண்டு குருத்துவாராவிற்கு செல்ல அனுமதி கிடைக்குமா என்பதற்குமான போராட்டம் நடக்கிறது. இதுவே தற்போது இந்தியாவில் நடக்கும் போராட்டம், இது சீக்கியர்கள் பற்றியானது மட்டுமல்ல, எல்லா மதங்களையும் பற்றியது என்று கூறினார். இதற்கு பாஜக தரப்பில் இருந்து கடுமையான எதிர்வினைகள் எழுந்த நிலையில் ராகுல் காந்தி தனது கருத்துக்கு விளக்கம் அளித்துள்ளார்.
அன்றைய தினம் அவர் பேசிய வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு ராகுல் காந்தி கூறியிருப்பதாவது, பாஜக வழக்கம்போல் பொய்களை பரப்பி வருகிறது. அவர்களால் உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாததால் என்னை அமைதியாக்க முயற்சிக்கிறார்கள். வெளிநாட்டில் வசிக்கும் ஒவ்வொரு சீக்கிய சகோதர சகோதரிகளிடத்திலும் நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன். நான் சொன்னதில் ஏதாவது தவறு உள்ளதா?, ஒவ்வொரு சீக்கியரும், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் எந்த அச்சமும் இன்றி தத்தமது மதங்களைப் பின்பற்ற சுதந்திரம் இங்கு உள்ளதா? என்று பதிவிட்டுள்ளார்.