பணிச்சுமையால் உயிரிழந்த ஊழியரின் பெற்றோரிடம் வீடியோ காலில் பேசிய ராகுல் காந்தி
- அன்னா செபாஸ்டியனின் மரணத்திற்கு காரணம் பணிச்சுமை தான் என அவரது தாயார் அனிதா கடிதம் எழுதியுள்ளார்.
- அன்னாவின் இறுதிச்சடங்குக்குக்கூட நிறுவனத்தில் இருந்து யாரும் வரவில்லை.
எர்ன்ஸ்ட் & யங் (EY) நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அன்னா செபாஸ்டியன் (26) என்ற இளம்பெண் பணிச்சுமை காரணமாக உயிரிழந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த அன்னா செபாஸ்டியனின் மரணம் கார்ப்பரேட் ஊழியர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அன்னா செபாஸ்டியனின் மரணத்திற்கு காரணம் பணிச்சுமை தான் என அவரது தாயார் அனிதா எர்ன்ஸ்ட் & யங் இந்தியா தலைவர் ராஜீவ் மேமானிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அன்னாவின் தாயார் எழுதிய கடிதம் இணையத்தில் வைரலாகி பலரும் அந்நிறுவனத்தைக் கடுமையாக விமர்சித்த நிலையில், இதனை வழக்காக எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் உறுதியளித்துள்ளது
இந்த விவகாரம் தொடர்பாக எர்ன்ஸ்ட் & யங் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அன்னாவின் தாயார் எழுதிய கடிதத்தைத் தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும், அன்னா செபாஸ்டியனின் அகால மரணத்தால் நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். மேலும் அன்னாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அன்னாவின் பெற்றோரிடம் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வீடியோ காலில் பேசி இரங்கல் தெரிவித்தார்.
கார்ப்பரேட் அலுவலகங்களில் உள்ள பணிச்சுமையை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் ராகுல்காந்தி உறுதியளித்தார்.