செய்திகள் (Tamil News)
ஷியாம் சரண் நேகி

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் உடல்நிலை கவலைக்கிடம்

Published On 2020-01-09 03:28 GMT   |   Update On 2020-01-09 03:28 GMT
சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால், அவருக்கு மாநில அரசின் சார்பில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிம்லா:

1947ம் ஆண்டு பிரிட்டனிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது நாம் அனைவரும் அறிந்ததே. அதன் பின்னர் 1951ம் ஆண்டு, சுதந்திர இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்றது.  இது நவம்பர் 26, 1949 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்திய அரசியலமைப்பின் விதிகளின் கீழ் நடத்தப்பட்டது.

இந்நிலையில், அந்த தேர்தலில் வாக்களித்த இந்தியாவின் முதல் வாக்காளரான இமாச்சல பிரதேச மாநிலத்தை சேர்ந்த நேகி  என்பவரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் அவருக்கு மாநில அரசின் சார்பில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இமாச்சல பிரதேச மாநிலத்தின் கின்னார் மாவட்டத்தின் கல்பா பகுதியைச் சேர்ந்தவர் ஷியாம் சரண் நேகி (வயது 103). ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியரான நேகி தான், 1951 ம் ஆண்டு இந்தியாவில் நடந்த பொதுத்தேர்தலில் வாக்களித்த முதல் வாக்காளர் ஆவார்.

சமீபகாலமாக வயது முதுமை சார்ந்த உடல்நலக்குறைவினால் நேகி பாதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவரது உடல்நிலை சற்று கவலைக்கிடமாக உள்ளதால் மாநில அரசு சார்பில் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அம்மாநிலத்தின் சுகாதார அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில், கின்னார் மாவட்ட சுகாதாரத் துறையின் குழு, நேகியின் இல்லத்திற்குச் சென்று அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறது.

Similar News