செய்திகள்
சமீர் வான்கடே குடும்பத்தினர் மகாராஷ்டிர மாநில கவர்னருடன் சந்திப்பு
ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் விமர்சனத்திற்கு உள்ளாகிய என்.சி.பி. மண்டல இயக்குனர் சமீர் வான்கடேயின் குடும்பத்தினர் இன்று கவர்னரை சந்தித்தனர்.
ஷாருக்கான் மகன் ஆர்யான் சொகுசு கப்பல் போதைப்பொருள் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு போதைப்பொருள் பயன்படுத்தியதாக தேசிய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் கடந்த மாதம் கைது செய்தனர். அதன்பின் ஜெயிலில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் முக்கிய அதிகாரியாக என்.சி.பி. மண்டல அதிகாரி சமீர் வான்கடே இருந்து வருகிறார். இவர் மீது மகாராஷ்டிர மாநில மந்திரி நவாப் மாலிக் அடுக்கடுக்கான புகார்களை வெளியிட்டு வருகிறார். முதலில் பா.ஜனதா பிரமுகர் உள்பட இருவர் சமீர் வான்கடே உடன் சேர்ந்து கொண்டு ஷாருக்கானிடம் மிரட்டி பணம் பறிக்க முயன்றனர் என்றார். பின்னர், சமீர் வான்கடேவின் பிறப்பு சான்றிதழ் போலியானவை என நவாப் மாலிக் குற்றம்சாட்டினார்.
இதற்கிடையே மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவை சமீர் வான்கடே சந்தித்து பேசினார். இந்த நிலையில் இன்று மகாராஷ்டிர மாநில கவர்னர் பகத் சிங் கோசியாரியை சமீர் வான்கடேயின் தந்தை, மனைவி மற்றும் சகோதரி ஆகியோர் சந்தித்து பேசினர்.
கவர்னரை சந்தித்தப்பின் சமீர் வான்கடேயின் தந்தை கூறுகையில் ‘‘என்னுடைய மருமகள், மகள் மற்றும் நான் ஆகியோர் கவர்னரை சந்தித்தோம். எங்களுடைய கோரிக்கைகளை அவரிடம் வழங்கினோம். எல்லாமே நல்லபடியாக நடக்கும் என கவர்னர் எங்களுக்கு உறுதி அளித்தார்’’ என்றார்.
சமீன வான்கடேயின் மனைவி கிராந்தி ரேத்கர் ‘‘எங்களுக்கு நடந்த எல்லா விசயங்களையும் கவர்னரிடம் தெரிவித்தோம். அவரிடம் புகார் அளிக்க மட்டுமே சென்றோம் என்றால், அது அல்ல. நாங்கள், உண்மைக்கான போராட்டம். நாங்கள் அதற்காக போராடிக் கொண்டிருக்கிறோம் என்றோம். எங்களுக்கு கவர்னர் வலிமை மற்றும் உறுதி அளித்தார்’’ என்றார்.