இந்தியா
காங்கிரஸ் எம்.பி திக்விஜய சிங்

உக்ரைனில் இருந்து திரும்பும் மாணவர்களுக்கு அரசு செலவில் இந்தியாவில் படிக்க வாய்ப்பு- திக்விஜய சிங் கோரிக்கை

Published On 2022-03-06 13:10 GMT   |   Update On 2022-03-06 13:10 GMT
உக்ரைனில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கைக்காக மாணவர்களின் குடும்பங்கள் ஏற்கனவே நிறைய பணம் செலவழித்துள்ளனர்.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதால் அங்குள்ள இந்தியர்கள் வெளியேற முடியாமல் தவிக்கிறார்கள். உக்ரைன் தனது வான் எல்லையை மூடியதால், இந்தியர்கள் அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, சுலோவாக்கியா, ஹங்கேரி சென்று அங்கிருந்து தாயகம் திரும்பி வருகிறார்கள்.
 
ஆபரே‌ஷன் கங்கா திட்டத்தின் மூலம் இந்தியர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. பயணிகள் விமானம் மற்றும் இந்திய விமானப்படை விமானம் மூலம் இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள். அதன்படி, இதுவரை 15 ஆயிரத்து 900 இந்தியர்கள் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் மாணவர்கள் ஆவார்கள்.

இந்நிலையில், உக்ரைனில் இருந்து திரும்பும் மாணவர்களுக்கு அரசு செலவிலேயே அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி திக் விஜய சிங் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி திக்விஜய சிங் மத்திய அரசுக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

உக்ரைனில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பயின்று வந்த மாணவர்கள், போர் காரணமாக படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு தாயகம் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்த மாணவர்களின் குடும்பங்கள் உக்ரைனில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் சேர்க்கைக்காக ஏற்கனவே நிறைய பணம் செலவழித்துள்ளனர்.

அதனால், உக்ரைனில் இருந்நு திரும்பிய மாணவர்களை இந்தியாவில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க வேண்டும். மேலும், அத்தகைய மாணவர்களின் கட்டணத்தை அரசாங்கமே செலுத்த வேண்டும்.

இதற்காக நாடு மற்றும் பொதுமக்களின் நலன் கருதி விதிகளை தளர்த்தி சிறப்பு திட்டத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசு முடிவெடுத்து மாணவர்களின் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மையை நீக்கும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்.. ஐபிஎல் போட்டி அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் சென்னை-கொல்கத்தா அணிகள் மோதல்

Similar News