கோவில் திருவிழாக்களில் 3 மணி நேரத்திற்கு மேல் யானைகளை நிறுத்தி வைக்கக்கூடாது- கேரளா ஐகோர்ட்
- யானைகளின் உணவு, ஓய்வை உறுதிசெய்ய வேண்டும்.
- தினமும் 6 மணி நேரத்திற்கு கூடுதலாக யானைகளை வாகனங்களில் நிறுத்தி அழைத்து செல்லக்கூடாது.
பெரும்பாவூர்
கேரளாவில் கோவில் திருவிழாக்களில் சாமி எழுந்தருளிப்பு நிகழ்ச்சிகளுக்கு யானைகள் பயன்படுத்தப்படுவது வழக்கம். அப்போது வனத்துறை தெரிவித்த வழிமுறைகள் பின்பற்றப்படுகிறது. சில இடங்களில் இதை மீறுவதாக புகார் எழுந்து வருகிறது. இதுதொடர்பாக கேரள ஐகோர்ட் நீதிபதிகள் ஜெயச்சந்திரன் நம்பியார், கோபிநாத் ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து விசாரித்தது.
இந்த அமர்வு, யானை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில், கோவில் திருவிழாவின்போது யானைகளை எழுந்தருளிப்பு நிகழ்ச்சிக்கு அழைத்து செல்லும் வேளையில் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து உத்தரவை, அதற்கு அனுமதி வழங்கும் மாவட்ட அளவிலான குழுவுக்கு பிறப்பித்து உள்ளது.
அதன்படி, தொடர்ந்து 3 மணி நேரத்திற்கு மேல் யானைகளை நிறுத்தி வைக்கக்கூடாது. அவற்றிற்கு உணவு, ஓய்வை உறுதிசெய்ய வேண்டும். யானைகளை அழைத்து வரும் வாகனங்களின் வேகம் ஒரு மணி நேரத்திற்கு 25 கி.மீ. கூடுதலாக இருக்கக்கூடாது. தினமும் 6 மணி நேரத்திற்கு கூடுதலாக யானைகளை வாகனங்களில் நிறுத்தி அழைத்து செல்லக்கூடாது உள்பட பல்வேறு உத்தரவுகளை ஐகோர்ட் பிறப்பித்துள்ளது.