ஊருக்குள் புகுந்த காண்டாமிருகம்: பீதி அடைந்த மக்கள்- வைரலாகும் வீடியோ
- அசாம் மாநிலம் கம்ரூப் மாவட்ட பகுதியில் நடந்ததாக கூறப்படுகிறது.
- காண்டாமிருகம் தொடர்ந்து வெறிகொண்டு ஓடியபடி கண்ணில் கண்டவர்களையெல்லாம் துரத்துகிறது.
சிறுத்தைகள், புலிகள் போன்றவையும், யானைகளும்கூட ஊருக்குள், தோட்ட பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்வதை கேள்விப்பட்டு இருப்போம். தாவர உண்ணி விலங்குகளான காண்டாமிருகம் பெரும்பாலும் ஊர்ப்புறத்தில் நுழைவது இல்லை. ஆனால் ஆக்ரோஷமான அவை ஊருக்குள் நுழைந்தால் என்ன நடக்கும் என்பதை சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ள ஒரு வீடியோ படம்பிடித்து காட்டுகிறது.
கிராம மக்கள் பீதி கிளம்ப ஓடுவதை வீடியோவில் பார்க்க முடிகிறது. இந்த சம்பவம், அசாம் மாநிலம் கம்ரூப் மாவட்ட பகுதியில் நடந்ததாக கூறப்படுகிறது. சிறிய ஊரை ஒட்டிய தோட்ட பகுதிக்குள் இருந்து அந்த காண்டாமிருகம் சாலைக்கு ஏறி வருகிறது. எதிரே ஒரு மனிதரை கண்டதும் அது ஆக்ரோஷம் அடைந்து அவரை தாக்க ஓடுகிறது.
இதனால் பீதி அடைந்த அந்த நபர் மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு தப்பித்து ஓடுகிறார். காண்டாமிருகம் தொடர்ந்து வெறிகொண்டு ஓடியபடி கண்ணில் கண்டவர்களையெல்லாம் துரத்துகிறது. மக்கள் பீதியில் கூச்சலிடுவதும் வீடியோவில் பதிவாகி உள்ளது. கேமராவில் படம் பிடித்தவரும் காண்டாமிருகத்திற்கு போக்கு காட்டியே வீடியோவை பதிவு செய்து உள்ளார். 2 நாட்களில் இந்த வீடியோ 2 கோடியே 67 லட்சம் தடவை ரசிக்கப்பட்டு உள்ளது.