நிறைய பணம் கிடைப்பதால் பீகார் போலீசார் மதுவிலக்கை விரும்புகிறார்கள்- பாட்னா உயர்நீதிமன்றம்
- பீகார் அரசின் மதுவிலக்கு சட்டம் சட்டவிரோத மதுபான விற்பனைக்கு வழிவகுத்துள்ளது.
- மதுவிலக்கு சட்டம் அரசு அதிகாரிகள் அதிகளவில் பணம் சம்பாதிப்பதற்கான ஒரு கருவியாக மாறியுள்ளது.
பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இதனால் அம்மாநிலத்தில் கள்ளச்சாராய விற்பனையும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதும் அதிகரித்துள்ளது. இதனால் கள்ளச்சாராயம் குடித்து பலர் அம்மாநிலத்தில் உயிரிழந்துள்ளனர்.
பீகார் மாநில கலால் துறையின் சோதனையில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மதுபானங்களை பதுக்கி வைத்திருந்ததாக குற்றம் சாட்டி காவல் நிலைய ஆய்வாளர் முகேஷ் குமார் பாஸ்வான் 2020 நவம்பரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தனது சஸ்பெண்ட் உத்தரவுக்கு எதிராக பாட்னா உயர்நீதிமன்றத்தில் முகேஷ் மனுத்தாக்கல் செய்தார். அக்டோபர் 29 அன்று இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவரின் சஸ்பெண்ட்-ஐ ரத்து செய்து உத்தரவிட்டது. நீதிபதியின் 24 பக்க உத்தரவு நவம்பர் 13-ம் தேதி இணையத்தில் பதிவேற்றப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணேந்து சிங், "பீகார் அரசின் மதுவிலக்கு சட்டம் சட்டவிரோத மதுபான விற்பனைக்கு வழிவகுத்துள்ளது. இது அரசு அதிகாரிகள் அதிகளவில் பணம் சம்பாதிப்பதற்கான ஒரு கருவியாக மாறியுள்ளது" என்று காட்டமாக கருத்து தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், காவல்துறை அதிகாரிகள், கலால் அதிகாரிகள் மட்டுமல்ல, மாநில வரித்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் மதுவிலக்கை விரும்புகிறார்கள். அவர்களுக்கு இதனால் பெரியளவில் பணம் கிடைக்கிறது.
மது அருந்தும் ஏழைகளுக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட வழக்குகளுடன் ஒப்பிடும்போது, சட்டவிரோதமாக மது கடத்தும் கும்பல்களின் மீதான வழக்குகள் குறைவாகவே உள்ளது" என்று தெரிவித்தார்.