இந்தியா
ரிசர்வ் வங்கி

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை- ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Published On 2022-04-08 05:54 GMT   |   Update On 2022-04-08 10:02 GMT
குறுகியகால கடனுக்கான வட்டி விகிதம் எந்த மாற்றமும் இன்றி 4 சதவீதமாகவே நீடிக்கும். வங்கிகளின் கடன்களுக்காக வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடனுக்கான வட்டியான ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை என்று ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் கூறியதாவது:-

குறுகியகால கடனுக்கான வட்டி விகிதம் எந்த மாற்றமும் இன்றி 4 சதவீதமாகவே நீடிக்கும். வங்கிகளின் கடன்களுக்காக வட்டி விகிதங்களில் மாற்றமில்லை. ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீதமாக தொடரும் என்றார்.

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாததால் வீடு, வாகனங்களுக்கான கடன் விகிதத்தில் மாற்றம் இருக்காது. ரெப்போ விகிதத்தை தொடர்ந்து 11-வது தடவையாக ரிசர்வ் வங்கி மாற்றம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து குறுகிய கால மற்றும் நீண்டகால கடன்களை பெறுகின்றன. இந்த கடன்களுக்கு ரிசர்வ் வங்கி ஒரு குறிப்பிட்ட வட்டியை வங்கிகளிடம் பெறுகிறது. குறுகிய கால கடன்களுக்கு ரிசர்வ் வங்கி விதிக்கும் வட்டி விகிதமே ரெப்போ வட்டி விகிதம் ஆகும்.

ஒமைக்ரான் வைரஸ் பரவல் குறைந்தபிறகு எதிர் பார்க்கப்படும் பொருளாதார பலன்கள் புவிசார் அரசியல் பதட்டங்களின் அதிகரிப்பால் பொருளாதாரம் புதிய மற்றும் மிகப்பெரிய சவால்களை எதிர் கொள்கிறது.

ஐரோப்பாவின் நிலைமை (ரஷியா-உக்ரைன் மோதல்) உலக பொருளாதாரத்தை தடம்புரள செய்யலாம். உண்மையான மொத்த உள் நாட்டு உற்பத்தி 2022-23-ம் நிதியாண்டில் 7.2 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முந்தைய கணிப்பு 7.8 சதவீதமாக இருந்தது.

சில்லரை பணவீக்கம் 5.7 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முந்தைய நிதியாண்டில் 4.5 சதவீதமாக இருந்தது.

பணவீக்கம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. உலகளாவிய உணவு பொருட்கள் விலைகள் மற்றும் உலோக விலைகள் குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்துள்ளன. இதனால் பணவிக்கத்தின் உயர்வுடன் பொருளாதாரம் போராடுகிறது.

உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் பொருளாதார ஏற்ற-இறக்கம் கொடுக்கப்பட்டால் மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்கள் காரணமாக பணவீக்கத்தின் எந்தவொரு கணிப்பும் ஆபத்து நிறைந்ததாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்... பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்

Tags:    

Similar News