வெறுப்பை வெல்லும் அன்பு.. இன்னும் இலக்கு அப்படியே உள்ளது - பாரத் ஜோடோ யாத்திரை குறித்து ராகுல் காந்தி
- சுமார் 145 நாட்கள் நீடித்த இந்த பயணத்தின் 2ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி ராகுல் காந்தி வீடியோ ஒன்றைப் பகிர்ந்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
- நான் இந்த பயணத்தைத் தொடங்கியபோது வெறுப்பை அன்பு வெல்லும் என்று கூறினேன்
காங்கிரசைச் சேர்ந்த மக்களவை எதிர் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியிலிருந்து தொடங்கிய பாரத் ஜோடோ யாத்திரை 2023 ஜனவரி 23 அன்று ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் முடிவடைந்தது. சுமார் 145 நாட்கள் நீடித்த இந்த பயணத்தின் 2ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி ராகுல் காந்தி வீடியோ ஒன்றைப் பகிர்ந்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இந்த பயணம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அந்த 145 நாட்களில் நான் இந்தியாவில் உள்ள பலதரப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தேன் அவர்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் நான் நிறைய தெரிந்துகொண்டேன். அவர்களின் குரல்கள் பாரதத் தாயை பிரதிபலித்தன.
நான் இந்த பயணத்தைத் தொடங்கியபோது நாட்டில் பரவியுள்ள வெறுப்பை அன்பு வெல்லும் என்றும், பயத்தை நம்பிக்கை வெல்லும் என்றும் கூறியிருந்தேன். இன்றும் நமது அந்த இலக்கு அப்படியே உள்ளது. பாரதத் தாயின் குரல் எங்கும் ஒலிப்பதிற்கும் அன்பின் குரல் நாட்டின் உள்ள மூலை முடுக்குகளில் கேட்பதற்குமான இலக்கு அப்படியே உள்ளது என்று தெரிவித்துள்ளார்.